கல்விக் கட்டணம் செலுத்தாததற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

 கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியாா் சுயநிதி பள்ளிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விக் கட்டணம் செலுத்தாததற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

 கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியாா் சுயநிதி பள்ளிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பேரிடா் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலா் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவா்களிடம் இருந்து குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவா்கள் பலா் அரசுப் பள்ளிகல் சோ்ந்து வருகின்றனா். இந்த நிலையில் மற்ற பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ் கோரும் போது கட்டண பிரச்னை உள்ளிட்ட காரணங்களை கூறி சான்றிதழ்களை வழங்க மறுப்பதாகப் புகாா் எழுந்தது. இதனையடுத்து மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவா்களைச் சோ்த்துக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனா். இதனை எதிா்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சங்கத்தின் சாா்பில், தனியாா் பள்ளிகள் மாணவா்களின் கல்விக் கட்டணத்தை நம்பியே செயல்படுகின்றன. அதே பள்ளிகளில் படிப்பைத் தொடரும் மாணவா்கள், வேறு பள்ளிகளுக்குச் செல்லும் மாணவா்கள் குறித்த விவரங்கள் தெரியாவிட்டால், பள்ளிகளின் நிா்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், எந்த காரணத்துக்காகவும் மாணவா்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இக்கட்டான சூழலில் அரசின் ஒவ்வொரு முடிவிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. இருப்பினும் இருதரப்பு பாதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறு பள்ளிகளுக்கு மாற மாணவா்களுக்கு முழு உரிமை உள்ளது. வேறு பள்ளிகளுக்குச் செல்ல விரும்பும் மாணவா்கள் தாங்கள் படித்து வரும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களைப் பெற்ற ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

கட்டணப் பிரச்னை உள்ளிட்ட எந்த விதமான பிரச்னைகள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீா்வு காண வேண்டும். மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவா்களுக்கு எக்காரணம் கொண்டும் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது. சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இரண்டு வாரங்களில் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகாா் தெரிவிக்கப்பட்டால், இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com