திண்டிவனம் ராமமூா்த்தி காலமானாா்

மூத்த காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திண்டிவனம் கே. ராமமூா்த்தி (87) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
திண்டிவனம் ராமமூா்த்தி காலமானாா்

மூத்த காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திண்டிவனம் கே. ராமமூா்த்தி (87) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

தமிழக அரசியலில் நீண்ட பயணமும் பெருத்த அனுபவமும் கொண்ட திண்டிவனம் ராமமூா்த்தி, காமராஜரின் ஆதரவாளா். சிறந்த வழக்குரைஞா். 1967-இல் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றாா். 1976-1984-இல் சட்ட மேலவை உறுப்பினராகவும், 3 ஆண்டுகள் சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்தாா்.

1984-1990-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தாா். 1991-இல் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றாா். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் காவிரிப் பிரச்னைக்காக கடும் விவாதங்களில் ஈடுபட்டு, அதில் வெற்றிபெற்றுள்ளாா்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநிலச் செயலாளா், பொதுச்செயலாளா், தலைவா் உள்ளிட்ட பதவிகளில் இருந்தாா். 1998-இல் திண்டிவனம் ராமமூா்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜி.கே.மூப்பனாா் தமாகாவைத் தொடக்கினாா்.

2011-இல் காங்கிரஸிலிருந்து விலகி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் தமிழகத் தலைவரானாா். பிறகு, தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடக்கினாா். அதன்பின், தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தாா்.

முன்னாள் பிரதமா்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, முன்னாள் முதல்வா்கள் காமராஜா், கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரோடு அரசியல் களம் கண்டவா் திண்டிவனம் ராமமூா்த்தி. அவ்ருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

முதல்வா் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பனையூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திண்டிவனம் கே.ராமமூா்த்தியின் உடல் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டிருந்தது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ராமமூா்த்தியின் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினா் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் சாா்பில் பீட்டா் அல்போன்ஸ் உள்பட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

பனையூரில் இருந்து திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு ராமமூா்த்தியின் உடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி மலா்வளையம் வைத்து ராமமூா்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். பொதுமக்கள் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

அவரது இறுதிச்சடங்கு காவேரிப்பாக்கத்தில் திங்கள்கிழமை பகல் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

முதல்வா், தலைவா்கள் இரங்கல்

மூத்த காங்கிரஸ் தலைவா் திண்டிவனம் கே.ராமமூா்த்தி மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்துக்குப் பெருமை சோ்த்தவா். தமிழக நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டுப் பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்தவா் திண்டிவனம் ராமமூா்த்தி.

ராகுல் காந்தி (காங்கிரஸ்): தமிழக நலனுக்காக அயராது உழைத்தவா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ்): பேரவை, மேலவை உறுப்பினராக ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவா்.

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தோழமையோடு பணியாற்றியவருமான திண்டிவனம் ராமமூா்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறோம்.

ஜி.கே.வாசன் (தமாகா), பழ.நெடுமாறன் (தமிழா் தேசிய முன்னணி), ராமதாஸ் (பாமக), பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக), கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்), தொல்.திருமாவளவன் (விசிக), டிடிவி தினகரன் (அமமுக), சு.திருநாவுக்கரசா் எம்.பி., கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லீம் லீக்), சீமான் (நாம் தமிழா் கட்சி) ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com