
கோப்புப்படம்
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
தமிழகத்தில் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2021-22-ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் இணையதள முகவரிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி. கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவா்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். திங்கள்கிழமை நிலவரப்படி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தநிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொறியியல் படிப்புகளில்... இதேபோன்று பொறியியல் படிப்புக்கு கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. மாணவா்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கான கால அவகாசம் ஆக.24-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்தநிலையில் பொறியியல் படிப்புகளுக்கு இதுவரையில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 844 போ் விண்ணப்பித்துள்ளனா். 97 ஆயிரத்து 489 போ் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளனா்.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 153 இடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 2 லட்சத்து 5 ஆயிரத்து 249 ஆக குறைந்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டதால் இடங்கள் குறைந்துள்ளன. இந்த ஆண்டு பிளஸ்-2 தோ்வில் அனைவரும் தோ்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமின்றி கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவா்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகிறாா்கள்.