குறைந்த கட்டணத்தில் பண்ணைக் கருவிகள் கிடைக்க.. வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்ப்பு

குறைந்த கட்டணத்தில் பண்ணைக் கருவிகள் பெறும் வசதியை  வருவாய்க் கோட்ட தலைநகரங்களிலிருந்து வட்டார அளவில் விரிவுபடுத்துவதற்கு,
குறைந்த கட்டணத்தில் பண்ணைக் கருவிகள் கிடைக்க..
குறைந்த கட்டணத்தில் பண்ணைக் கருவிகள் கிடைக்க..


குறைந்த கட்டணத்தில் பண்ணைக் கருவிகள் பெறும் வசதியை  வருவாய்க் கோட்ட தலைநகரங்களிலிருந்து வட்டார அளவில் விரிவுபடுத்துவதற்கு, வேளாண்மைத் துறைக்கான  தனி நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என  விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

தமிழகத்தில் பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்து, உணவு உற்பத்தியைப் பெருக்குதல், சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், தொழில்நுட்பக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் விற்பனை,  விதைச் சான்றளிப்பு  ஆகிய துறைகள் செயல்பட்டு வருகின்றன.  அந்த வகையில், பண்ணைக் கருவிகள் வழங்குதல், நுண்ணீர்ப் பாசனம் அமைத்தல்,  பண்ணைக் குட்டை அமைத்தல், தடுப்பணை அமைத்தல், பாசனப் பகுதியில் வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகள் வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய்க் கோட்ட அளவில் அமைந்துள்ள இந்த அலுவலகங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு, பண்ணைக் கருவிகளைக் குறைந்த கட்டணத்தில் பெறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியிடங்களில் மணிக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும் பண்ணைக் கருவிகளை, வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.340 முதல் ரூ.840 வரை சலுகைக் கட்டணத்தில் விவசாயிகள் பெற முடியும். மேலும், விவசாய  நிலங்களுக்கு அந்த இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவும் அரசுத் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 
இதுபோன்ற சலுகைகள் இருந்தும், ஆண்டுக்கு 1,200 மணி நேரம் கூட டிராக்டர், பேக் கூக் பிரண்ட் லோடர் (குழி எடுக்கும் இயந்திரம்), அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இயக்க வேண்டும் என்ற இலக்கை பூர்த்தி செய்ய முடியாமல் வேளாண் பொறியியல் துறை தடுமாறுவதாகக் கூறப்படுகிறது. 

கட்டணம் குறைவாக இருந்தும் தடுமாற்றம் ஏன்?:

2 முதல் 3 மடங்கு குறைந்த வாடகையில் பண்ணைக் கருவிகள் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டாலும், அதிகாரிகள் ஆர்வம் காட்டாததாலும், விவசாயிகளிடையே விழிப்புணர்வு இல்லாததாலும் இத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள இடத்துக்கு ஒரு விவசாயி மட்டுமே பண்ணைக் கருவி கேட்டு பதிவு செய்திருந்தால், போக்குவரத்து செலவில் ஏற்படும் இழப்பை காரணம் காட்டி அலுவலர்கள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகம்
முழுவதுமுள்ள 125 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களில், 90 பணியிடங்கள் காலியாக இருப்பதும் குறைபாடாக உள்ளது.
தொடர்புடைய பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, மேலும் சில விவசாயிகளை ஒருங்கிணைத்து பண்ணைக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு பொறியியல் பிரிவு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. 

மேலும், சில இடங்களில் தனி நபர்களுக்கு பண்ணைக் கருவிகளை வழங்கி உள் வாடகை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. விவசாயிகள் நேரடியாக கேட்டு வந்தால், ஓட்டுநர் இல்லை எனக் காரணம் கூறி வெளியேற்றி விடுகின்றனர். தனியார் பல மணி நேரம் இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும், குறைந்த நேரத்தை குறிப்பிட்டு, சில அலுவலகங்களில் முறைகேடு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் குறைந்த கட்டணத்தில் பண்ணைக் கருவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசின் சலுகைகளை சாமானிய விவசாயிகள் பெற முடியாத நிலை உள்ளது.

வட்டார அளவில் விரிவாக்கம் தேவை:  இது தொடர்பாக கொடகனாறு பாசன விவசாயிகள் சங்கச் செயலர் இரா.சுந்தரராஜன் கூறியதாவது: வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் முறையாக கள ஆய்வு செய்தால், ஆண்டுக்கு 1,200 மணி நேரம் என்ற இலக்கை வட்டார அளவில் கூட எளிதாக எட்ட முடியும். டீசல் செலவை சரிக்கட்டுவதற்காக சில இடங்களில் தனியாருடன் கூட்டு சேர்ந்து, பண்ணைக் கருவிகளை முறைகேடாக வழங்குகின்றனர். இதனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அரசு பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பிரச்னை ஏற்படுகிறது. வேளாண் பொறியியல் துறையில் தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்கள் இருந்தும் பயனில்லாத நிலை உள்ளது. நுண்ணீர்ப் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய வேளாண் பொறியாளர்கள், அளவீட்டுப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் பொறியியல் அலுவலகங்களை எளிதாக அணுக முடிவதில்லை. 

டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, பண்ணைக் கருவி இயக்கும் தனியார்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். அரசின் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், வருவாய்க் கோட்டங்களிலிருந்து வட்டார அளவில் பண்ணைக் கருவிகள் கிடைப்பதற்கான சூழலை அரசு ஏற்படுத்தி, அதை முறையாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கட்டண விவரம்
வேளாண் பொறியியல் துறை சாரபில் பண்ணைக் கருவிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டண விவரம்  (அடைப்பு குறிக்குள் தனியார் கட்டணம்): 
மண்தள்ளும் இயந்திரம் (புல்டோசர்) - ரூ.840 (ரூ.2,000)
டிராக்டர் - ரூ.340 (ரூ.1,000),
சோளம் அறுவடை கருவி - ரூ.340 (ரூ.1,200)
கழற் கலப்பை கருவி - ரூ.340 (ரூ.1,000)
தொழி உழவு கருவி - ரூ.340 (ரூ.1,300)
 வரப்பு அமைக்கும் கருவி - ரூ.340 (ரூ.1,500)
மட்டைகளைத் தூளாக்கும் கருவி - ரூ.340 (வெளியிடங்களில் இல்லை)
நெல் அறுவடை இயந்திரம் - ரூ.840 (ரூ.1,400)
குழி எடுக்கும் இயந்திரம்  - ரூ.660 (ரூ.1,100)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com