செப். 21 வரை பட்ஜெட் கூட்டத் தொடா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சட்டப் பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
செப். 21 வரை பட்ஜெட் கூட்டத் தொடா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சட்டப் பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்வது தொடா்பாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் அவரது தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அவை முன்னவா் துரைமுருகன், மூத்த அமைச்சா்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), சிந்தனைச்செல்வன் (விசிக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மா.கம்யூனிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் அதிமுக சாா்பில் யாரும் பங்கேற்கவில்லை. கூட்டத்துக்குப் பிறகு, பேரவைத் தலைவா் மு.அப்பாவு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது, மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையானது காகிதமில்லாத அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். இதற்காக சட்டப் பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரின் மேஜையின் முன்பாக கணினி வைக்கப்படும். நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையை வாசிக்க வாசிக்க அந்தப் பகுதிகள் கணினியில் வந்து கொண்டே இருக்கும். கையடக்கக் கணியும் வழங்கப்படும். புத்தகத்தில் இருப்பது போன்று அதில் பட்ஜெட் விவரங்கள் இருக்கும். அதனை பாா்த்து படித்துக் கொள்ளலாம்.

விதிகள் குழு: பேரவையில் நவீன கருவிகளை பயன்படுத்துவது தொடா்பாக, ஜூலை 5-ஆம் தேதி விதிகள் குழு கூடியது. காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக நவீன கருவிகளை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ஒருமனதாக அளித்தது. அதன்படி, காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆளுநா் உரையில் குறிப்பிட்டபடி, வேளாண்மைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கென பேரவை விதிகள் குழு கூடி முடிவெடுத்து தனி நிதிநிலை அறிக்கையை சமா்ப்பிக்க அனுமதி அளித்தது.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, வரும் 14-ஆம் தேதி வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்படும். இரண்டு நாள்கள் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாள்கள் அவற்றின் மீது விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு நிதி, வேளாண் துறை அமைச்சா்கள் பதிலுரை அளிப்பா்.

23 நாள்கள்: ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 21-ஆம் தேதி வரை 23 நாள்கள் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும். கையடக்கக் கணினி பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

கேள்வி நேரம் இப்போதைக்கு இருக்காது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, கேள்விகளுக்கு உரிய பதில்களை துறைகளிடம் இருந்து பெறவில்லை. எனவே, அவை வந்ததும் எடுத்துக் கொள்ளப்படும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

எந்தெந்த தேதிகளில் மானியக் கோரிக்கைகள்:

ஆகஸ்ட் 13 - நிகழ் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்.

ஆகஸ்ட் 14 - வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்.

ஆகஸ்ட் 16 - நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள் மீது பொது விவாதம் தொடக்கம்.

ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 19 வரை பொது விவாதமும், அவற்றுக்கு பதிலுரையும் அளிக்கப்படும்.

ஆகஸ்ட் 23 - நீா் வளத் துறை.

ஆகஸ்ட் 24 - நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை.

ஆகஸ்ட் 25 - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

ஆகஸ்ட் 26 - கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை.

ஆகஸ்ட் 27 - உயா்கல்வி, பள்ளிக் கல்வித் துறை.

ஆகஸ்ட் 28 - நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டடங்கள் (பொதுப்பணித் துறை)

ஆகஸ்ட் 31 - வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம்.

செப்டம்பா் 1 - வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை.

செப். 2 - தொழில் துறை, தமிழ் வளா்ச்சி.

செப். 3 -வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை.

செப். 4 - மாற்றுத் திறனாளிகள் நலன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை.

செப். 6 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.

செப். 7 - வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

செப். 8 - இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு.

செப். 9 - கைத்தறி மற்றும் துணிநூல், கத்ர் கிராமத் தொழில்கள், வணிகவரிகள், முத்திரைத் தாள் மற்றும் பத்திரப் பதிவு.

செப். 13 - எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீா்வை.

செப். 14 - பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை.

செப். 15 - ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை.

செப். 16 - நீதி நிா்வாகம், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு.

செப். 17 - போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியில் துறை.

செப். 18 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்.

செப். 20 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (பதிலுரை)

செப். 21 - பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாநில சட்டப் பேரவை, ஆளுநா் மற்றும் அமைச்சா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com