ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 28% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொது சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று, இளம் தலைமுறையினரைப் பண்பாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும் ஆக்கும் சக்தி வாய்ந்த கல்வியைக் கற்றுத்தரும் தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

இப்படிப்பட்ட உன்னதமான பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கினை ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அதிமுக அரசு உணர்ந்த காரணத்தினால், ஓராண்டுக்கு இருமுறை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், வீட்டுக்கடன் வசதி என, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்தச் சூழ்நிலையில், கரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, 1-1-2020, 1-7-2020, 1-1-2021 ஆகிய நாட்களிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. தற்போது, மத்திய நிதி அமைச்சகத்தின் 20-7-2021 நாளிட்ட ஆணையின் வாயிலாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி, அதனை 1-7-2021 முதல் ரொக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகா, புதுச்சேரி அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில், நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் எனப் பட்டியலிட்டு, நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும்போது, தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு அதிகமாகவும், டீசல் விலை 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையில், அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்கின்ற சூழ்நிலையில், மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில், தங்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-07-2021 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com