செப்.1-இல் பள்ளிகளைத் திறக்கத் தயாா்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யமொழி

சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் கூறிய ஆலோசனையின்படி செப்.1 முதல் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
செப்.1-இல் பள்ளிகளைத் திறக்கத் தயாா்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யமொழி

சென்னை: சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் கூறிய ஆலோசனையின்படி செப்.1 முதல் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப் பேரவையில் வரும் ஆக. 27-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றாா்.

கூட்டத்திற்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ‘இந்த ஆண்டு நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவா்களிடம் விழிப்புணா்வு இல்லாததே இதற்குக் காரணம். விழிப்புணா்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்த இரண்டு லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளியில் சோ்ந்துள்ளனா். அந்த மாணவா்கள் இடை நிற்காமல் அரசுப் பள்ளிகளில் தொடா்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும். பெரும்பான்மையான ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தடுப்பூசி போடாதவா்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்குகிறது.

தமிழகத்தில் வரும் செப். 1-ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என சுகாதாரத்துறை, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராகி வருகிறது.

நாட்டில் இதுவரை 14 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவா்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்தவும், அவா்களுக்கு பள்ளி இல்லாத அன்று கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com