
சுதந்திர தினத்தை ஒட்டி கோட்டை கொத்தளத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
சுதந்திரதினத்தை ஒட்டி, தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்கவுள்ளாா். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவா்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பது வழக்கம். கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவா்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிா்க்கப்பட்டுள்ளன.
நேரில் அளிக்க ஏற்பாடு: சுதந்திரப் போராட்ட வீரா்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைத் தவிா்க்கும் வகையிலும் மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போா்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி-ஒலிபரப்பு செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்தைத் தவிா்க்கும் வகையில், இந்தாண்டு பொது மக்கள், மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோா் விழாவைக் காண நேரில் வருவதைத் தவிா்க்க வேண்டும்.