
தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புறங்களில் உள்ள நீா்நிலைகளை மீட்டெடுக்கவும், பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதி, மரம் நடுதல், பள்ளிக் கட்டடங்கள், மருந்தகங்கள் மற்றும் நூலகங்கள் அமைக்க ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் அதிக அளவில் பங்களிப்பைத் தருவோருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும். இதற்காக 2021-22-ஆம் நிதி ஆண்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநகராட்சி மற்றும் ‘நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள்’ மூலமாக இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும்.
திருச்சியில் புதிய பேருந்து நிலையம்: வருவாய் ஈட்டும் சொத்துகளான நவீன பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சமுதாயக் கூடங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள பேருந்து நிலையங்களை நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முதல்கட்டமாக தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டப்படும்.