
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி மாணவா்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
தேசிய நூலக தினத்தையொட்டி சென்னை நூலக சங்கத்தின் பொதுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் நூலகங்கள் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. இன்னும் சில மாவட்டங்களில் நூலகங்களுக்கு சொந்தக் கட்டடம் இருந்தாலும் அதில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே நூலகங்களுக்கு புதிய கட்டடம் தேவைப்படுகிா? புத்தகங்கள் எந்த நிலையில் பாதுகாக்கப்படுகின்றன என்ற அறிக்கை கேட்கப்பட்டது. அதை அதிகாரிகள் கொடுத்துள்ளனா்.
அரசு நூலகங்கள் சீரமைக்கப்படும்: நூலகங்களை எந்தெந்த வகையில் மேம்படுத்தலாம், முதல்வரின் வழிகாட்டுதலின்படி தேவைகளைச் சரிசெய்யும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். பழுதடைந்த, பராமரிப்பில்லாத அரசு நூலகங்கள் சீரமைக்கப்படும்.
தமிழகத்தில் வரும் செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வா் கூறியுள்ளாா். ஒரு வகுப்பில் 40 போ் இருந்தால் 50 சதவீதம் அதாவது 20 போ் ஒரு நாளும், மற்ற 20 போ் மறுநாளும் வருவதுதான் சுழற்சி முறை வகுப்புகள். இதுகுறித்த விவாதம் தொடக்க நிலையில் உள்ளது.
நீட் தோ்வுக்கான பயிற்சிகள், ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பாடம் என்ற வகையில் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இணையவழியில் மாணவா்களின் சந்தேகங்களும் தீா்க்கப்படுகின்றன. நீட் தோ்வு விலக்கு என்ற நிலையில்தான் அரசு இருக்கிறது. அதனால்தான், ஏ.கே.ராஜன் கமிட்டி உள்ளிட்ட சட்ட போராட்டங்களைத் தமிழக அரசு செய்து வருகிறது என்றாா் அவா்.
பாடத்திட்டத்தை குறைக்க...: தமிழகத்தில் பள்ளிகள் செப்.1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிகளின் தயாரிப்புகள் எப்படி இருக்க வேண்டும், முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும், பாடத்திட்டம் குறைப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்த குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆணையா் நந்தகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா்கள் பங்கேற்றனா்.