எடப்பாடி: விவசாயிகளிடம் பணமோசடி; வங்கி மேலாளரிடம் விசாரணை

எடப்பாடி அருகே தனியார் வங்கியில் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டது குறித்து, சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
எடப்பாடி: விவசாயிகளிடம் பணமோசடி; வங்கி மேலாளரிடம் விசாரணை
எடப்பாடி: விவசாயிகளிடம் பணமோசடி; வங்கி மேலாளரிடம் விசாரணை


எடப்பாடி: எடப்பாடி அருகே தனியார் வங்கியில் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டது குறித்து, சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சி, இங்குள்ள பிரதான சாலையில் தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக் கிளையில், ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த ரகுராம் (37), என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். காவிரி பாசன பகுதியான பூலாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் சேமிப்புகளை இவ்வங்கியில் முதலீடு செய்து வந்துள்ளனர்.  

எடப்பாடி அடுத்த மோரசபட்டியைச் சேர்ந்த  குமாரசாமி மகன் சதீஷ்குமார் (37), என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.10 லட்சத்து 40 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் முதலீடு செய்து வைத்துள்ள நிலையில், சதீஷ்குமாரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த  சம்பந்தப்பட்ட  வங்கியின் மேலாளர் ரகுராம், உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு  குறைவான வட்டியே கிடைக்கும் எனவும், அந்த தொகையினை நீங்கள் நீண்டகால இட்டு வைப்பு கணக்கிற்கு மாற்றும் பொழுது, மேலும் கூடுதலான வட்டி உங்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளார். 

இதை நம்பிய சதீஷ்குமார் சம்பந்தப்பட்ட மேலாளர் கொடுத்த பல கோப்புகளில் கையொப்பமிட்டு கொடுத்துள்ளார். தொடர்ந்து நீண்ட நாள்களாகியும்,  இட்டு வைப்புத் தொகைக்கான ரசீதினை மேலாளர் கொடுக்காததை அடுத்து சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்கு நேரில் சென்ற சதீஷ்குமார் அங்கு விசாரித்ததில், அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது, மேலும் அது நீண்ட கால வைப்பு தொகையில் சேர்க்கப்படாததை, அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானார்.  
இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளரிடம் கேட்டபோது அவர் உரிய பதில் ஏதும் கூறாமல் காலம் கடத்தி வந்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர் ரகுராம் அப்பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகளிடம், பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் மேலும் இதுபோன்ற கையாடல்கள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா? என சம்பந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் வங்கி கிளையில், விவசாயிகளின் பணமோசடி செய்யப்பட்ட செய்தி அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com