அதிமுக வெளிநடப்பு ஏன்? - இபிஎஸ் விளக்கம்

நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். 
அதிமுக வெளிநடப்பு ஏன்? - இபிஎஸ் விளக்கம்

நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

தமிழக பட்ஜெட் உரைக்கு முன்னதாகவே அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வெளிநடப்பு ஏன்? என்பது குறித்து அவர் விளக்கமளித்தார். 

அவர் பேசியதாவது: 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505-க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் நேரத்தின்போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தான் போடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் கூறினார் முதல்வர்.

ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் இதற்கு எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை. மேலும் நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நீட் தேர்வுக்கு நன்கு படித்து தயாராகுங்கள் என்று மாணவர்களுக்கு தெளிவான அறிவுரையும் வழங்காமல், மாணவ சமுதாயத்தினரிடையே பெரிய குழப்பத்தை இந்த விடியா அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்திற்கு ஆளானார்கள். எனவே நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு கானாததை கண்டித்தும், 

மாநிலத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்றறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் அம்மா அரசு என்ன கூறியிருக்கிறதோ அதையே ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளனர். பேட்டியின்போது 14வது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூ.75,000 கோடி இழப்பு என்றும், ரூ.25,000 கோடி திட்ட நிதி, முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் ஒரு தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். 14வது நிதிக்குழு குறிப்பிட்ட வரி, ஒரு உத்தேச மதிப்பீடுதான். ஆனால் அதுவே வசூலிக்கப்பட வேண்டிய வரி ஆகாது. அதேபோல் செலவு பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நல திட்ட உதவிகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். 2006-2011ல், திமுக அரசு வழங்கிய கலர் டி.வி, அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்குத்தான் வழங்கப்பட்டது. இதேமுறைதான் அதிமுக அரசிலும் பின்பற்றப்பட்டது. எனவே 2006ம் ஆண்டில் அவர்களது அரசே இந்த தவறை செய்தது என்கிறார்களா? மேலும், இது தவறு எனில் திமுக அரசு தற்போது வழங்கிய கரோனா நிதியில், அவர்கள் விரும்பிய மாற்றத்தை செய்திருக்கலாமே. எனவே ஊதாரித்தனமான செலவு செய்த முன்னாள் அரசு என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்ச்சனம் செய்த நிதி அமைச்சர் அவர்களைக் கண்டித்தும், 

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதை கடுமையாக கண்டிக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவுள்ள சூழ்நிலையில் இப்படி பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்களின் வேகத்திற்கு தடைபோட திமுக-வினர் பகல் சுனவு கான வேண்டாம். 

இதுபோன்ற பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எனவே உண்மைக்கு புறம்பாகவழக்குகளை போட்டு, பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசை கண்டித்தும்,

மூச்சுக்கு 300 தடவை பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுபவர் திமுக தலைவர் ஸ்டாலின். கடந்த 9.8.2021 அன்று கழக நாளிதழ் நமது அம்மா அலுவலகத்தின் பூட்டை உடைத்து திமுக அரசின் காவல்துறையினர் உள்ளே நுழைந்து சோதனை நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சோதனையின் போது நமது அம்மா ஊழியர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அடுத்த நாள் வெளியிட வேண்டிய பத்திரிகையினை அச்சிட்டு வெளியிடுவதற்கு எங்களை உள்ளே அனுமதியுங்கள் என்று காவல்துறையினரிடம் பத்திரிகை ஊழியர்கள் எவ்வளவு கெஞ்சியும் ஒருவரைகூட உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அன்றைய பத்திரிகை அச்சடிக்க முடியாமல், 10.8.2021 அன்று வெளியிடப்பட வேண்டிய நமது அம்மா நாளிதழ் வெளிவரவில்லை. இது போன்று பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com