வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது: காவிரி எஸ்.ரெங்கநாதன்

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் காவிரி எஸ்.ரெங்கநாதன் தெரிவித்தார். 
மன்னார்குடி காவிரி எஸ். ரெங்கநாதன்
மன்னார்குடி காவிரி எஸ். ரெங்கநாதன்

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் காவிரி எஸ்.ரெங்கநாதன் தெரிவித்தார். 

முதல்முறையான வேளாண்மைக்கு என தமிழ்நாட்டில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை, சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை வேளாண் முதல் நிதி நிலை அறிக்கையை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

நம்பிக்கை தரும் பட்ஜெட்: இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் மன்னார்குடி காவிரி எஸ்.ரெங்கநாதன் கூறியது: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று, பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீடு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்திருப்பதையும்

விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில்கள் செய்ய நகர்ப்புறங்களை நோக்கி இளைஞர்கள் மற்றும் வேளாண்மை பட்டதாரிகள் செல்லுவதை தடுக்கும் வகையில், அவர்கள் வேளாண்மை பணியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் 2500இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவுப்பும் பாராட்டும்படி உள்ளது.

பாரம்பரிய நெல் வகைகளை திரட்டிப் பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அணைத்திருப்பதை வரவேற்பதுடன் பாரம்பரிய நெல் வகைகளை வாங்க விவசாயிகளிடையே உள்ள தயக்கத்தை நீக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து அந்த நெல் ரகங்களை அரசே விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறக்கும் முன்னரே விவசாயிகளுக்கு தேவையான இடுப்பொருள் முன்கூட்டியே அவர்களுக்கு கிடைத்திடும் வகையிலான திட்டம் பாராட்டுக்குரியது.

வேளாண்மை பட்ஜெட் தயாரிப்புக்கு முன் விவசாயிகளிடம் கருத்துரு கேட்டது போல் 6 மாதத்திற்கு ஒரு முறை விவசாயிகளை அழைத்து கலந்து பேசி விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

மொத்ததில் தமிழகஅரசின் முதல் வேளாண்மை நிதி நிலை அறிக்கை பாராட்டும் படியும் வரவேற்கும் வகையில் இருப்பதுடன் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com