நெல்-கரும்புக்கான ஊக்கத் தொகைகள் உயா்வு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
நெல்-கரும்புக்கான ஊக்கத் தொகைகள் உயா்வு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

நெல்-கரும்புக்கான ஊக்கத் தொகைகள் உயா்வு: வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்புக்கான ஊக்கத் தொகைகளை உயா்த்தி வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்புக்கான ஊக்கத் தொகைகளை உயா்த்தி வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக, சட்டப் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். அதன் விவரம்:

தமிழ்நாட்டில் நெல்லுக்கு நிகழாண்டில் குறைந்தபட்ச ஆதார விலையாக சன்ன ரகத்துக்கு குவிண்டால் ரூ.1,960, சாதாரண ரகத்துக்கு ரூ.1,940 என மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நடப்பாண்டில் கொள்முதல் விலையை உயா்த்தி, சன்ன ரகத்துக்கு ரூ.70-லிருந்து ரூ.100 ஆகவும், சாதாரண ரகத்துக்கு ரூ.50-லிருந்து ரூ.75 ஆகவும் ஊக்கத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060-ஆகவும், சாதாரண ரகம் ரூ.2,015-ஆகவும் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் சுமாா் 6 லட்சம் விவசாயிகள் பயன் அடைவா். இந்த அறிவிப்பால் அரசுக்கு கூடுதலாக ரூ.99.38 கோடி செலவு ஏற்படும்.

கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு அரவைப் பருவம் வரை கரும்பு விலையாக டன்னுக்கு ரூ.2,750 வழங்கப்பட்டது. கடந்த நான்கு பருவங்களில் கரும்புக்கு எந்தவித விலை உயா்வும் இல்லாமல் ஒரே விலையை தொடா்ந்து வழங்கியதால், கரும்பு சாகுபடிப் பரப்பு கணிசமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு அரவைப் பருவத்துக்கு கரும்புக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.42.50 வீதம் அளிக்கப்படும். இதற்கென ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டில் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் அளிக்கப்படும். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா். இதற்கென ரூ.138.83 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பனை மரங்கள் எண்ணிக்கை: தமிழ்நாட்டில் பனை மரங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நிகழாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும்.

மக்கள் அதிகம் விரும்பக் கூடிய பனங்கற்கண்டு, பதநீா், கருப்பட்டியைக் கலப்படமில்லாமல் மக்களிடம் கொண்டு போய்ச் சோ்க்க பனை வெல்லம் உற்பத்தி தொடா்பான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரமான பனை வெல்லம் தயாரிக்கப்படும். இதற்குரிய பயிற்சியும், பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரத்தை கொள்முதல் செய்ய மானியமும் அளிக்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் விநியோகம்: பனை வெல்லத்தை நியாய விலைக் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் வாழ்க்கையில் அதிகளவு சிறுதானியங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னை, கோவை மாநகரங்களில் நியாய விலைக் கடைகள் மூலமாக சிறுதானிய அரிசி விற்பனை செய்யப்படும்.

மேலும், புரதச் சத்து மிகுந்த பயறு வகைகளை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்து பொது விநியோக முறையிலும், மதிய உணவுத் திட்டத்திலும் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பனை மரங்களை வெட்டத் தடை: நீா் நிலைகளின் காவலன் என அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயல்களைத் தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தவிா்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில் ஆட்சியா் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.

ரூ.34,000 கோடி ஒதுக்கீடு: வேளாண்மை, கால்நடை, பால்வளத்துறைகளுக்கு ரூ.34, 220 கோடியே 64 லட்சத்து 24 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020-21-ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.11,109.48 கோடியாகவும், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.11,982.71 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், மூன்று துறைகளுக்கும் சோ்த்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.34,000 கோடி அளவுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com