சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் தமிழ்நாடு பெற்றுள்ளது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் தமிழ்நாடு பெற்றுள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் தமிழ்நாடு பெற்றுள்ளது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் தமிழ்நாடு பெற்றுள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலினும் கொடியேற்றி உரையாற்றினர். மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில், சென்னை ஆளுநர் மாளிகை இல்லத்தில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர்,  “நம் நாட்டின் 75-ஆம் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாகிய இன்று உங்களிடம் உரையாற்றுவதில் நான்
பெருமகிழ்ச்சியடைகிறேன். செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் இம்மாநிலம் பெற்றுள்ளது. மாநில அரசின் அயராத முயற்சிகளின் காரணமாக, தமிழ்நாடு பல துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நீங்கள் அனைவரும் முழு வெளிப்படைத்தன்மையுடன் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் மக்களுக்கு ஊழல் இல்லாத நிருவாகத்தை வழங்க வேண்டுமென்றும் அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தை முதலிடத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்றும் நான் விழைகிறேன். தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற செல்வி பவானி தேவியையும் ஏனைய ஒலிம்பிக் வீரர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

அனைத்து வகையிலும் அவர்களுக்கு உதவுவதில் மாநில அரசு எடுத்த முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.  ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஏனைய உலக அளவிலான போட்டிகளுக்கான விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காணும் சிறப்பான முயற்சியை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்வதுடன் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்று தரும் வகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில், கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராட ஒரு குழுவாக அயராது பணியாற்றிய முதலமைச்சரையும் மொத்த அரசு இயந்திரத்தையும் அதிலும் குறிப்பாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், வருவாய், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய துறைகளையும் நான் வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் கரோனா நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றுவதன் வாயிலாகவும் 100% கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் வாயிலாகவும் தமிழக மக்கள் அரசிற்குத் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து அளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர், எம். அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சஞ்ஜீப் பானர்ஜி,  அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் டாக்டர் வி. இறையன்பு, இ.ஆ.ப, ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டீல், இ.ஆ.ப., மற்றும் ஏனைய உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com