டாஸ்மாக் மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையால் மக்கள் பெரிதும் அவதியுறுவதாக கூறி அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் மீனவ கிராம பெண்கள்
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் மீனவ கிராம பெண்கள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பெரிதும் அவதியுறுவதாக கூறி அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்டது நொச்சிக்குப்பம் மீனவ கிராமம். இங்கு சுமார் 4000 பேர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மீனவ கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டி டாஸ்மாக் மதுபான கடை கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி உள்ள பாதை வழியே பெண்கள், பள்ளி மாணவர்கள்,சிறுவர்கள் தினந்தோறும் ஆரம்பாக்கம் பஜார் பகுதிக்கு சென்று வருவதுண்டு.

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் மீனவ கிராம மக்கள்.

கடந்த 4 ஆண்டுகளாய் இப்பகுதி மக்கள் போகும் போதும் வரும்போதும் குடிமன்னர்களால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நொச்சிக்குப்பம் மீனவ கிராம நிர்வாகிகளான 
எம்.தேசப்பன், இ.ரமேஷ், ஆர்.சீனு, கே.எஸ்.ஏ.தேசிங்கு தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 500 பேர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கடையை இடமாற்றம் செய்யக்கோரி கண்டன முழக்கம் இட்டனர்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகம் தெரிவித்தபோது, மேற்கண்ட மதுபானக்கடை வழியே நொச்சிக்குப்பம் பகுதி மக்கள் மட்டுமல்லாது, பாட்டை குப்பம், வெங்கடேச பெருமாள் நகர் குப்பம் பகுதி மக்களும் தினமும் வந்து போவதுண்டு. இந்நிலையில் இந்த டாஸ்மாக் மது பான கடையில் குடிக்கும் குடிமன்னர்கள் வருவோரை போவோரை கேலி செய்து வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் மது பிரியர்கள் மக்கள் போகும் வழியெல்லாம் மதுபாட்டில்களை உடைத்து அந்த வழியே நடக்க முடியாத நிலையை உருவாக்குகின்றனர் என்றார் . 

மேலும் இந்த மதுகடையானது இப்பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், அங்காளம்மன் கோவிலில் இருந்து 300 மீட்டர் தொலைவிலும் உள்ளது. மதுபிரியர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்திலும், அங்காளம்மன் கோவில் வளாகத்தை ஒட்டியும் மது அருந்தி மது பாட்டில்களை அங்கேயே போட்டு விடுவதாக இப்பகுதி கிராம நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யனாரப்பன் ,வருவருவாய் ஆய்வாளர் வைத்தியலிங்கம்,  கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் விரைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி,  இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தெரிவித்து கடையை இடமாற்றம் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com