சீர்காழி ஆதார் மையத்தில் போதிய வசதியின்மை: தேவை அரசின் கவனம்

சீர்காழி பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் ஆதார் மையத்தில் சர்வர் பிரச்னையால் காலை முதல் ஆதார் எடுக்க காத்திருந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் அவதியடைந்தனர். சிலர் மயக்கமடைந்தனர்.
சீர்காழி ஆதார் மையத்தில் போதிய வசதியின்மை: தேவை அரசின் கவனம்
சீர்காழி ஆதார் மையத்தில் போதிய வசதியின்மை: தேவை அரசின் கவனம்

சீர்காழி: சீர்காழி பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் ஆதார் மையத்தில் சர்வர் பிரச்னையால் காலை முதல் ஆதார் எடுக்க காத்திருந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் அவதியடைந்தனர். சிலர் மயக்கமடைந்தனர்.

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாள்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம். 

குடியிருப்போருக்கு அவர்களின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவரத் தரவுகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் "ஆதார்" எனும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகின்றது. தற்போது மனிதன் வாழ்வதற்கு ஆதார் அவசியம் என்பது எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என உத்தரவு போட்டிருந்தாலும், வங்கி கணக்கு துவங்கவும், புதிய செல்லிடைபேசி எண் பெறவும், வங்கிகள் மூலம் பணபரிமாற்றத்திற்கும், ரயிலில் முன்பதிவு செய்யவும் என அத்துனைக்கும் ஆதார் தேவைப்படுகிறது. 

ஏழை மக்கள் ரேசனில் அரிசி வாங்குவதற்கு கூட ஆதார் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் அவசியம் ஆகியுள்ளது. இவ்வாறு அனைத்துக்கும் ஆதார் இன்றியமையாதது என்பதால் ஏற்கனவே ஆதார் அட்டைகள் எடுத்தவர்கள் அவற்றில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், செல்லிடைப்பேசி எண் அதில் ஏற்பட்டுள்ள சிறு தவறுகள் போன்ற திருத்தங்கள் செய்வதற்கு சீர்காழி பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 2014ம் ஆண்டு முதல் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் தனியார் ஏஜென்சி மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு சீர்காழி ஒன்றியத்தில் உள்ள 37பஞ்சாயத்துக்கள், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42பஞ்சாயத்துக்கள், வைத்தீஸ்வரன்கோயில் பகுதிகளில் வசிக்கும் மக்களில் பலர் ஆதார் திருத்தம் செய்வதற்கும் பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்கவும் நாள்தோறும் அதிகளவு வருகின்றனர். 

இவ்வாறு ஆதார் மையத்திற்கு வரும் மக்களுக்கு அங்குள்ள ஒரே ஒரு லேப்டாப் மூலம் தான் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவந்தது. இதனிடையே அதிகளவு மக்கள் இங்கு ஆதார் அட்டை தேவைகளுக்காக வருவதால் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு கணினி அமைத்து ஆதார் எடுக்கிறார்கள். இருந்தபோது வரும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் பல மணிநேரம் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே இந்த மையத்தில் உள்ள கணினி சர்வர் பிரச்னையால் அவ்வபோது ஏற்படுவதால் ஆதார் தேவைக்காக வரும் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். 

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க வரும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவு கூட சரியான நேரத்திற்கு வழங்கமுடியாமல் வரிசையில் நிற்கின்றனர். சிலர் வெயிலில் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் மயக்கம் அடைவதும் நடக்கிறது.

ஆகையால் இந்த மையத்திற்கு கூடுதல் திறனுடன் கணினிகள்  வழங்கி மக்களின் ஆதார் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேபோல் சீர்காழி நகராட்சி, தலைமை தபால் நிலையம் ஆகிய பகுதிகளிலும் ஆதார் அட்டை எடுக்க நாள் 1க்கு 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் அதனைபெற அதிகாலை  4 மணிமுதல்  தபால்நிலையம் முன்பு  வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. நாள் ஒன்றுக்கு 50பேருக்கு மட்டும் ஆதார் பதிவு செய்து எடுக்கமுடிகிறது. 

இதனால் தினந்தோறும் பொதுமக்கள் ஆதார் மையத்திற்கு வந்து காத்திருக்கும் சூழலும், 50டோக்கனை கடந்துவிட்டால் மீண்டும் மறுநாள் வந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு தற்போது பள்ளியில் புதிய  வகுப்பு சேர்க்கைக்கு சிறுவர்கள், சிறுமிகளுக்கு ஆதார் கட்டாயமாக வேண்டும் என்பதால் பள்ளி நிர்வாகம் ஆதார் எடுத்துவந்தால்தான் பள்ளிசேர்க்கை நடைபெறும் என அதிரடியாக கூறியுள்ளனர்.

இது குறித்து ஆதார் மையத்தில் பணியாற்றும் பணியாளர் கூறுகையில்,  குறைந்த திறன் கணினிகளை வைத்து பணிபுரியும் எங்களிடம் மக்கள் கோபம் திரும்புகிறது. அதிகாரிகளும் மாதத்திற்கு ஒரு முறை ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு வரும்போது 30 சதவீததிற்கு மேல் தவறுகள் இருந்தால் எங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

குறைந்த சம்பளத்தில் மன உளைச்சலுடன் வேலை பார்த்தாலும் ஆதார் எடுக்கும் மக்களுக்கு கார்டுகள் சென்று அடைவதில்லை. இதனால் தான் எங்களால் பணியாற்ற முடியவில்லை என்றார். 

ஆகையால் தமிழக அரசு சீர்காழியில் கூடுதலாக ஆதார் மையத்தினை ஏற்படுத்தவேண்டும். அந்த மையத்திற்கு அதிக திறனுள்ள கணினிகளை அதிகளவு வழங்கவேண்டும். அதேபோல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com