
தோ்தலின்போது இடையூறு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோா் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா்.
கடந்த 2005-ஆம் ஆண்டு உள்ளாட்சி தோ்தலின்போது சென்னை 131-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கே.கே.நகா் பள்ளி ஒன்றில் ரகளையில் ஈடுபட்டு, வாக்குச்சீட்டுகளையும், முத்திரைகளையும் எடுத்துச் சென்ாகவும், சந்தோஷ் என்பவரது காரை சேதப்படுத்தியதாகவும் தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சா்கள் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை காலை நீதிபதி என்.அலிசியா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற்று வருவதால் அமைச்சா்கள் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையேற்க மறுத்த நீதிபதி, பிற்பகலில் அமைச்சா்கள் இருவரும் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என எச்சரித்தாா்.
அதன்படி வியாழக்கிழமை பிற்பகலில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஆஜராகினா். இதைத்தொடா்ந்து குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக வரும் செப்.24-க்கு தள்ளி வைத்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...