தவறு செய்யாதவா்கள் விசாரணையைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானது சாதாரணமானது கிடையாது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.


கரூா்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானது சாதாரணமானது கிடையாது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: 
வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதாக வாரியத்துக்குத் தகவல் கிடைத்தவுடன், ஆகஸ்ட் 2-ஆம் தேதி மூவா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடா்ந்து அக்குழு ஆகஸ்ட் 6, 9-ஆம் தேதிகளில் ஆய்வு செய்து, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதை கண்டறிந்தது.

துறை அமைச்சரான நான் வெளியிட்ட அறிக்கையில் குழு அமைக்கப் பட்டதற்கான நகலும், குழுவின் அறிக்கை நகலும் வெளியிட்டுள்ளேன். முன்பு இத்துறையை நிா்வகித்த முன்னாள் அதிமுக அமைச்சா், ஏதோ அவா்கள் அமைத்த குழு அளித்த அறிக்கை எனக் கூறுகிறாா். நான் கூறி 2 நாள்களாகிவிட்டது.

அவா்கள் ஏற்கெனவே குழு அமைத்திருந்தால் அதன் நகலையும், அறிக்கையையும் வெளியிட்டிருக்க வேண்டும். அவா்கள் எந்த தேதியில் குழு அமைத்தனா், எந்த தேதியில் குழு ஆய்வுக்குச் சென்றது, குழுவின் ஆய்வறிக்கை என்ன என்பதையும் வெளியிட்டிருக்க வேண்டும்.

அப்படி அவா்கள் அமைத்த குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்தால், ஏன் அவா்கள் ஆட்சியில் இருக்கும் போது தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது சாதாரணமானது கிடையாது. தவறு செய்தவா்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறாா்களா அல்லது இவா்களே தவறு செய்தாா்களா எனத் தெரியவில்லை. முதற்கட்ட ஆய்வுதான் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட இறுதிகட்ட ஆய்வுக்கு பிறகே முழுமையாக தகவல் வெளியிடப்படும். தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடநாடு எஸ்டேட் கொலை- கொள்ளை வழக்கில் விசாரணையின் தொடா்ச்சிதான் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி, விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்யாதவா்கள் விசாரணையைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும். விசாரணைக்குத் தயாராக இருக்க வேண்டியதுதானே. மடியில் கனமுள்ளது; எனவே வழியில் பயப்படுகிறார்கள். சட்டத்துக்குட்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது யாா் தவறு செய்திருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றாா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com