தேனியிலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக-கேரள எல்லை குமுளியில் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர்
தமிழக-கேரள எல்லை குமுளியில் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற ஆண், பெண் கூலித் தொழிலாளர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கம்பம்மெட்டு, குமுளி வழியாக ஏலக்காய் தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வந்தனர். தடுப்பூசி சான்றிதழ் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்து வேலைக்குச் சென்று வந்ததால் இ-பாஸ் அனுமதி கேட்பதில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றவர்களிடம் இ-பாஸ் அனுமதி உள்ளதா என்று கூறி வேலைக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டது.

தடுப்பூசி சான்றிதழ், ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் மட்டும் போதும் என்று அறிவித்த நிலையில் மீண்டும் இ- பாஸ் உள்ளதா என்று கேட்டு தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினரிடம் கம்பம் கூடலூரைச் சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வாகனங்களை விடுத்து நடந்து மாற்று வாகனங்கள் மூலம் வேலைக்குச் சென்றனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக இ -பாஸ்  பெறுவதற்கான இணையதளம் முடக்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு எல்லை சோதனைச்சாவடிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருவது தொழிலாளர்களை வேதனை அடையச் செய்கிறது.

தேனி மாவட்ட ஆட்சியர், இடுக்கி மாவட்ட ஆட்சியரிடம் பேசி தடையின்றி தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com