பொன்மலையில் வடிவமைக்கப்பட்ட நீராவி என்ஜின்: உதகை நோக்கிப் பயணம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்  புதிதாக வடிவமைக்கப்பட்ட நீராவி என்ஜின் உதகை  நோக்கி பயணத்தை தொடங்கியது.
பொது மேலாளர் திருச்சி பொன்மலையில் வடிவமைக்கப்பட்ட நீராவி இன்ஜினை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பொது மேலாளர் ஜான் தாமஸ்.
பொது மேலாளர் திருச்சி பொன்மலையில் வடிவமைக்கப்பட்ட நீராவி இன்ஜினை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பொது மேலாளர் ஜான் தாமஸ்.

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட நீலகிரி நீராவி என்ஜினையும், வேகன்களுடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட டீசல் என்ஜினையும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்து புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்பட்டு வரும் நீராவி மலை ரயில் கடந்த 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது.

இந்த நீராவி ரயிலானது சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது.

உதகையின் இயற்கை எழிலையும், வனவிலங்குகளையும், மலைமுகடுகளையும் மலைரயிலில் பயணிக்கும்போது கண்டு ரசிக்க முடியும். 
இதனால், இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.

இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ரூ 8.50 கோடி மதிப்பில் "கோல் பைர்டு" எனப்படும் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜினும், ரூ 9.80 கோடி  மதிப்பில்  பர்னஸ் ஆயில் மூலம் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் எஞ்ஜின்கள் பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டு உதகைக்கு புறப்பட்டு சென்றது.

இதன் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது சிறுசிறு தவறுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது பொது மேலாளர் கொடியசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புராதனத்தை பறைசாற்றும் வகையிலும் அதே நேரத்தில் தற்போதைய கால சூழலுக்கு ஏற்பவும் இந்த மலை ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 10 முதல் 11 கிமீ வேகத்தில் செல்லும் இந்த மலை ரயிலில் பயணிக்கும் பயணிகள் இயற்கை எழிலை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.

மலை முகடுகளும் பள்ளத்தாக்குகளும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் மேகங்களும்  பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

இந்த மலை ரயிலில் ஏறத்தாழ 3,600 பாகங்கள் உள்ளது. இதில் 1400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையிலும், மீதமுள்ள பாகங்கள் தமிழகத்தில் கோவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாங்கி வரப்பட்டு முற்றிலும் இந்திய தயாரிப்பாக மலை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 4 ஆயிரத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் , 3.5 டன் எடை கொண்ட நிலக்கரியையும் இதில் எரிபொருளாக எடுத்து செல்ல முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 4 நீராவி என்ஜின்கள் பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டு ஃபர்னஸ் ஆயில் மூலம் எரிக்கப்பட்டு நீராவியால் இயக்கப்படுகிறது. இந்த முறை ரயில்கள் வண்ணத்திலும் வடிவமைப்பிலும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் காலங்களில் இதுபோன்ற பல  ரயில்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என பணிமனை ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

சிறப்பாக பணியாற்றி 100வது ஆண்டை எட்டும் பொன்மலை பணிமனைக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், வந்தே பாரத் ரயில் பணிகளை மேற்கொள்ள திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால், பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஷியாமதர் ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com