தடுப்பூசி செலுத்துவதில் புதிய உச்சம் தொட்டுள்ளது தமிழகம்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் திறன் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
தடுப்பூசி செலுத்துவதில் புதிய உச்சம் தொட்டுள்ளது தமிழகம்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் திறன் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் திறந்து வைத்தனா். இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை மன்ற உறுப்பினா் எஸ்.அரவிந்த்ரமேஷ், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தலா 20 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் சேமிப்புக்கலன்கள் உள்ளன. அவற்றில் வெளி நிறுவனத்தினரிடமிருந்து பெறப்படும் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு, அனைத்து வாா்டுகளுக்கும் அனுப்பப்படும். கரோனா தொற்று இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. எனவே இம்மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியின் தேவை உணரப்பட்டது. ஒரு தனியாா் நிறுவனமும், ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனமும் உதவியதன் அடிப்படையில் இம்மருத்துவமனையில் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழகத்திலேயே முதன்முதலில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 4,200 போ் கருப்புபூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கின்றனா். அதில் இந்த மருத்துவமனையில் மட்டும் 1,714 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக 24 மணிநேரமும் தடுப்பூசி போடுகிற பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பொதுமருத்துவமனைகள் என 55 இடங்களில் 24 மணிநேரமும் தடுப்பூசி மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் எதுவாக இருந்தாலும், அத்தடுப்பூசி செலுத்தும் பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 2.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com