தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து: சென்னை மாநகராட்சி

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரி
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986, பிரிவு-5ன் கீழ் 01.01.2019 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல்
மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின் படி, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்/உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் 01.01.2019 முதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.

சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும்
உபயோகித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் அல்லது நபர்களின் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 351 A–ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வணிக நிறுவனத்தின் தொழில் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தடை செய்யப்பட்ட ஒருமுறை தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு அபராதம் வசூலிக்கப்படும்.

மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகும், நான்காவது முறை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் (அ) அங்காடியின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19.08.2021 முதல் 25.08.2021 வரை 2,773 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,390 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3,23,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com