கடனாநதி வனப்பகுதி: தோட்டங்கள், வயல்களில் புகுந்து நாசமாக்கிய காட்டு யானைகள்

வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடனாநதி வனப்பகுதி: தோட்டங்கள், வயல்களில் புகுந்து நாசமாக்கிய காட்டு யானைகள்
கடனாநதி வனப்பகுதி: தோட்டங்கள், வயல்களில் புகுந்து நாசமாக்கிய காட்டு யானைகள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான பங்களாக்குடியிருப்பு கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், விளை நிலங்களுக்குள் நுழைந்து மா மற்றும் நெற்பயிர்களை நாசப்படுத்தின. 

வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு, பங்களாக் குடியிருப்பு, சிவசைலம் கிராமங்கள் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் உள்ளதால் அடிக்கடி வனப்பகுதியிலிருந்து காட்டுப் பன்றி, கரடி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட மிருகங்கள் ஊருக்குள் நுழைவது வாடிக்கை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடையம் வனச்சரகப் பகுதியில் தொடர்ந்து கரடிகள் தொல்லை இருந்து வந்தது. 

இந்நிலையி ல் இன்று அதிகாலை பங்களாக்குடியிருப்புப் பகுதியில் உள்ள விளை நிலங்களில் வனப்பகுதியிலிருந்து நுழைந்த காட்டு யானைக் கூட்டம் மாந்தோட்டம் மற்றும் நெல் வயல்களில் இறங்கி பயிர்களை நாசப்படுத்தி சென்றுள்ளன. இதில் பங்களாக்குடியிருப்பைச் சேர்ந்த குணசேகரன், பேச்சிக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான வயலில் பயிர் செய்திருந்த நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் நாசமாக்கியுள்ளன. சுமார் 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் மலையடிவாரத்திலுள்ள தனியார் தோட்டத்தில் மா மரங்களை முறித்து சேதமாக்கியுள்ளன.

இது குறித்துத் தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் செண்பகப்ரியா நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கடையம் வனச்சரகப் பகுதியில் சுமார் 27 கி.மீ. தூரத்திற்கு தொங்கும் மின் வேலி அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அதற்கானப் பணிகள் தொடங்கும். மேலும் இந்தப் பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலர்களும் வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் தற்போது சீதாப்பழம், மாம்பழம் சீசனாக இருப்பதால் கரடிகள் அடிக்கடி ஊருக்குள் வந்தன. தற்போது கரடிகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. தொடர்ந்து கரடி உள்ளிட்ட மிருகங்கள் ஊருக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து குணசேகரன் கூறும்போது, தொடர்ந்து இந்தப் பகுதியில் காட்டுப் பன்றி, கரடி தொல்லைகள் இருந்து வந்தன. தற்போது யானைகள் வயலுக்குள் இறங்கத் தொடங்கியுள்ளன. வனவிலங்குகளால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் இறங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாய சங்கத் தலைவர் கண்ணன் கூறும்போது, இரண்டு ஆண்டுகளாக கார்பருவத்தில் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தது. இந்த ஆண்டு கார் சாகுபடியில் பயிரிட்டிருந்தும் விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்துகின்றன. வனவிலங்குகளால் ஏற்பட்ட சேதத்திற்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கவில்லை. அரசு இழப்பீடு கூட வழங்க வேண்டாம். ஆனால் விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுத்தால் போதும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com