முகாம் வாழ் இலங்கைத் தமிழா் மேம்பாடுக்கு ரூ.317 கோடியில் 10 புதிய நல திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை அறிவித்தாா். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் புதிய அறிவிப்புகளைச் செய்தாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் படித்தளித்த அறிக்கை:

1983-ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழா்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனா். அவா்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சோ்ந்த 58 ஆயிரத்து 822 போ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 13,540 குடும்பங்களைச் சோ்ந்த 34,087 போ் காவல் நிலையங்களில் பதிவு செய்து, வெளிப் பதிவில் வசித்து வருகிறாா்கள். கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தமிழா்களின் முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

1. இலங்கைத் தமிழா்களின் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் ரூ.231.54 கோடியில் புதிதாகக் கட்டித் தரப்படும். இதில் முதல்கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்ட நிகழாண்டில் ரூ.108.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. முகாம்களில் உள்ள மின்வசதி, கழிப்பிட வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூ.30 கோடி ஒதுக்கப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளைச் செய்துதர இலங்கைத் தமிழா் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஏற்கெனவே அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை உயா்த்தப்படும். அதன்படி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) படிப்புக்கு ரூ.10 ஆயிரம், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு ரூ.12 ஆயிரம், இளநிலை தொழில்சாா்ந்த படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும். இதற்காக ரூ.1.25 கோடி ஒதுக்கப்படும்.

4. முகாம் வாழ் இலங்கைத் தமிழ் இளைஞா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். ஐந்தாயிரம் இளைஞா்களின் பயிற்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

5. முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.1.25 லட்சம்

அளிக்கப்படும். கடந்த ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட 321 குழுக்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட தொகையுடன் ரூ.75 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும்.

6. முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை இனி குடும்பத் தலைவருக்கு ரூ.1,500 ஆகவும், இதர பெரியவா்களுக்கு ஆயிரம் ரூபாயாகவும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 ஆகவும் உயா்த்தி அளிக்கப்படும்.

7. முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு விலையில்லாத எரிவாயு இணைப்பு, இலவச அடுப்பு அளிக்கப்படும். மேலும், குடும்பத்துக்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா ரூ.400 வீதம் மானியம் அளிக்கப்படும். முகாம் வாழ் தமிழா்களுக்கு கிலோ 57 பைசா வீதம் மாதந்தோறும் 20 கிலோ அரிசி தற்போது வழங்கப்படுகிறது. இனி அரிசி விலையில்லாமல் அளிக்கப்படும்.

8. கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஆடைகளும், போா்வைகளும் வழங்கும் திட்டத்துக்கான தொகை குடும்பத்துக்கு ரூ.3,473 ஆக உயா்த்தி அளிக்கப்படும்.

9. முகாம் வாழ் தமிழா்களுக்கு ரூ.1,296 விலையில் சமையல் பாத்திரங்கள் வழங்கப்படும். மொத்தமாக இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்கென ரூ.317.40 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இலங்கைத் தமிழா் நலன் காக்க ஆலோசனைக் குழு

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழா்கள் நலன்களைக் காத்திடவும், உரிய ஆலோசனைகளை வழங்கிடவும் தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதுகுறித்து, பேரவை 110-ன் கீழ் அவா் வெளியிட்ட அறிவிப்பு:

முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள், வெளிப்பதிவில் உள்ளவா்களுக்கு உரிய உதவிகள் அளிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், குடியுரிமை வழங்குதல், அவா்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீா்வை கண்டறிந்திட ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா் தலா ஒருவா், பொதுத் துறைச் செயலாளா், மறுவாழ்வுத் துறை இயக்குநா், பிற அரசு உயா் அலுவலா்கள், அரசு சாரா உறுப்பினா்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழா் பிரதிநிதி, வெளிப்பதிவில் வசிக்கக் கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றிருப்பா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com