வேலை வாங்கித் தருவதாக ரூ.15.75 லட்சம் மோசடி : 3 பேர் கைது

தில்லி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425-ஐ மோசடி செய்ததாக 3 பேரை வெள்ளிக்கிழமை தேனி தனிப் படை காவலர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஜய், ராமச்சந்திரன், கோவிந்த் ஆகியோருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் தனிப் படை காவலர்கள்.
கைது செய்யப்பட்ட விஜய், ராமச்சந்திரன், கோவிந்த் ஆகியோருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் தனிப் படை காவலர்கள்.

தில்லி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425-ஐ மோசடி செய்ததாக 3 பேரை இன்று  ஆக-27 (வெள்ளிக்கிழமை) தேனி தனிப் படை காவலர்கள் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி மனைவி சாரதா. இவரது செல்லிடபேசி எண்ணுக்கு வேலை வாய்ப்புக்காக விபரங்களை அனுப்பி வைக்குமாறு குறுந்தகவல் வந்துள்ளது. இதன்படி, சாரதா தனக்கு குறுந்தகவல் வந்த செல்லிடபேசி எண்ணுக்கு தனது கல்வித் தகுதி உள்ளிட்ட சுய விபரங்களை அனுப்பியுள்ளார்.

சில நாட்களுக்கு பின்பு சாரதாவை செல்லிடபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர், சாரதா தில்லி விமான நிலையத்தில் தள மேற்பார்வையாளர் பணிக்கு தேர்வாகியுள்ளதாகவும், அதற்கு பதிவு கட்டணமாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.2,250 செலுத்து வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

செல்லிடபேசியில் தொடர்பு கொண்டவர் கூறியபடி சாரதா அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.2,250 செலுத்தியுள்ளார். இதையடுத்து, சாரதாவின் செல்லிடபேசிக்கு போலியாக பணி நியமன ஒப்பந்தத்திற்கான கடிதம் அனுப்பட்டுள்ளது.

தொடர்ந்து சாரதாவை செல்லிடபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் பயிற்சிக் கட்டணம், தொழில்நுட்ப உபகரணக் கட்டணம், வங்கியில் சம்பள கணக்கு தொடங்குவதற்காக வைப்புத் தொகை, மருத்துவ பரிசோதனை கட்டணம் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு தவணைகளில் சாரதாவிடமிருந்து வங்கி கணக்கு மூலம் மொத்தம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425-ஐ பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடன் செல்லிடபேசியில் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டதாலும், அவர்கள் தனக்கு அனுப்பியிருந்த பணி நியமன ஒப்பந்தம் போலியானது என்றும் தெரிய வந்த சாரதா, இது குறித்து தேனி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், போடி காவல் ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா, திவான் மைதீன், சிறப்பு சார்பு ஆய்வாளர் துரைராஜ், மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப் படையினர் இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தினர்.

இதில், தில்லியில் தங்கியிருந்து கால் செண்டர் வைத்து நடத்தி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் விஜய்(29), மணியன் மகன் ராமச்சந்திரன்(31), மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் மகன் கோவிந்த்(21) ஆகியோரை தில்லியில் வைத்து தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 31 செல்லிடபேசிகள், கணினி, மடிக்கணினி, 46 வங்கி ஏடிஎம் அட்டைகள், செல்லிடபேசி சிம் கார்டுகள், போலி ஆவணங்கள், வங்கி காசோலைகள் ஆகிவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

விஜய், ராமச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு செல்லிடபேசி மூலம் வேலை வாய்ப்புக்கான குறுந்தகவல் அனுப்பியும், செல்லிடபேசியில் தொடர்பு கொண்டும் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மொத்தம் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதும், அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடபேசி சிம் கார்டு வாங்கித் தருவதற்கும் கோவிந்த் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தனிப் படை காவலர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com