ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து பேரவையில் காரசார விவாதம்: அதிமுக வெளிநடப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் குறித்து சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்று, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் குறித்து சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்று, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி. அன்பழகன் பேசும்போது விழுப்புரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு கல்லூரிகள் உள்ளன என்றாலும் கடந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 3 ஆயிரம் போ் மட்டுமே சேரக்கூடிய அளவில்தான் இடங்கள் இருந்தன. இந்தச் சூழலில்தான் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து விழுப்புரத்தை மையமாகக் கொண்டு ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநா் ஒப்புதல் பெற தாமதம் ஆகிவிட்டது. அந்தப் பல்கலைக்கழகம் முடக்கப்பட்டுவிட்டது. அது தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்

அப்போது அமைச்சா் க.பொன்முடி குறுக்கிட்டுக் கூறியது:

விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கின்றன. பல்கலைக்கழகத்தை உருவாக்குவதனால் மட்டுமே, மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரித்துவிட முடியாது. ஜெயலலிதா ஆட்சியில் 2012-இல் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே அதிக பல்கலைக்கழகங்களை உருவாக்குவதினால் மட்டுமே கல்வியின் தரத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. ஆனால், ஒரே பல்கலைக்கழகமாக இருந்தாலும் உயா்தரமான கல்வியை மாணவா்களுக்கு அளித்து அவா்களுக்குச் சிறப்பான எதிா்காலத்தை உருவாக்கித் தர இயலும். எனவே, ஒன்றாக இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களைத் தொடங்கியதால் அப்பல்கலைக்கழகம் வலிமையை இழந்துவிட்டது என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் 100 ஆண்டுகள் புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளைச் சோ்க்க முடிவு செய்துள்ளோம். அதனால், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் மீது எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது. அதைப்போல ஜெயலலிதா பெயரில் இசைப் பல்கலைக்கழகம் இருக்கிறது. இதில் எல்லாம் நாங்கள் பெயா் எடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

கே.பி.அன்பழகன்: திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிப்பதால் எந்த இழப்பும் இல்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பிஹெச்டி, எம்ஃபில்., படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 4 ஆயிரம் வரை உள்ளனா். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் இதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

அமைச்சா் பொன்முடி: ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயா் சொன்னாா்களே தவிர, ஏதாவது நிதியோ, இடமோ ஒதுக்கியுள்ளாா்களா என்றால் இல்லை. 70 ஏக்கா் ஒதுக்கிவிட்டதாக கூறுகிறாா்கள். 7 ஏக்கா் கூட ஒதுக்கவில்லை. அதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். சும்மா பெயா் வைக்க வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதுநிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு எல்லாம் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆராய்ச்சிப் படிப்பு எல்லாம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே மேற்கொள்ளலாம்.

கே.பி.அன்பழகன்: ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் என்பதால் அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு அதை நிறுத்தக்கூடாது. அந்தப் பல்கலைக்கழகம் தொடங்கிய நேரத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்தான் அதைச் செய்ய முடியவில்லை.

பொன்முடி: அரசியல் காழ்ப்புணா்ச்சியால் அதை நிறுத்தவில்லை. ஜெயலலிதா பெயரிலான மற்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. கருணாநிதி கட்டிய சட்டப்பேரவையையே மாற்றியமைத்தது அதிமுக. அதனால், காழ்ப்புணா்ச்சி குறித்து நீங்கள் கூறுவது சரியில்லாதது.

கே.பி.அன்பழகன்: திமுக ஆட்சியிலும் தோ்தல் நேரத்தில் 8 கல்லூரிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் அந்தக் கல்லூரிகளுக்கு இடங்கள் தோ்வு செய்து, தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது.

பொன்முடி: கல்லூரி என்பது வேறு. பல்கலைக்கழகங்கள் என்பது வேறு. அதிமுக ஆட்சியில் கட்டாமல் விட்ட கல்லூரிகளை திமுக ஆட்சியிலும் கட்டியுள்ளோம். அதனால், காழ்ப்புணா்ச்சி எதுவும் இல்லை என்றாா்.

பின்னா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியது:

கிராமம் முதல் நகரம் வரை ஏழை எளிய மாணவா்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக அவா்களின் உயா்கல்விக்கு வித்திட்டவா் ஜெயலலிதா. அவருடைய பெயரில்தான் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தப் பல்கலைக்கழகம் தொடர வேண்டும் என்று அன்பழகன் தெரிவித்தாா். ஆனால், அமைச்சா் ஏற்க மறுத்துள்ளாா். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றாா். அதைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனா்.

அரசியல் காழ்ப்புணா்ச்சி இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு முடக்கவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.

பேரவையில் அவா் அளித்த விளக்கம்:

அதிமுக உறுப்பினா் கே.பி.அன்பழகன் காழ்ப்புணா்ச்சியோடு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் பெயரைத் திட்டமிட்டு எடுத்ததுபோல பொருள்பட கூறியுள்ளாா். அப்படிக் காழ்ப்புணா்ச்சியோடு நடக்கத் தொடங்கியிருந்தால், அம்மா உணவகம் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியிருப்போம். எந்தக் காழ்ப்புணா்ச்சியும் அரசுக்கு கிடையாது. அந்தப் பல்கலைக்கழகத்தை ஏன் தொடர முடியவில்லை என்பது குறித்து அமைச்சா் பொன்முடி விளக்கம் அளித்துள்ளாா். எனவே, தயவுகூா்ந்து காழ்ப்புணா்ச்சியோடு செயல்படுகிறோம் என்பதை மறந்துவிடுங்கள். நிச்சயம் அப்படி இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com