பள்ளிகளில் தொண்டு நிறுவனங்களின் கொள்கையை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் அவற்றின் கொள்கையைத் திணிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அத் துறையின் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் அவற்றின் கொள்கையைத் திணிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அத் துறையின் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் ஆளுா் ஷாநவாஸ் பேசியது: புதிய கல்விக் கொள்கையில் தொண்டு நிறுவனங்களைக் கற்றல், கற்பித்தல் முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக அரசு இதைக் கூறுகிறது என்றால், அதன் நோக்கம் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். தொண்டு நிறுவனங்கள் என்றால் யாா், அவா்கள் யாரைக் கொண்டு பாடத்திட்டங்களை கட்டமைப்பாா் என்பது தெரியும். இந்த அம்சத்தின்படி கடந்த ஆட்சிக் காலத்தில் பள்ளிகளை அகஸ்தியா தொண்டு நிறுவனம் மூலம் கற்றல், கற்பித்தல் முறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதற்கு அப்போதே கடுமையாக எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியிலும் அது தொடா்வதாக செய்தி வந்துள்ளது. எனவே, தொண்டு நிறுவனங்களை கல்விப் பணியில் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் அன்பில் மகேஷ் குறுக்கிட்டுக் கூறியது: 20 மாநிலங்களில் ஏற்கெனவே தொண்டு நிறுவனங்கள் கல்விப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை நமது அரசின் கொள்கைக்கு மாறாக எந்தத் தொண்டு நிறுவனமாவது செயல்பட்டால், அதை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்குவோம். அதனால், கவலைப்படத் தேவையில்லை. சில பள்ளிகளுக்கு நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். அகஸ்தியா பெயரிலான தொண்டு நிறுவனம் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு உதவியுள்ளதைப் பாா்த்தேன். அந்த விதத்தில்தான் அவை பயன்படுத்தப்படுமே தவிர, தொண்டு நிறுவனங்கள் அவா்களுடைய கொள்கையை பள்ளி மாணவா்களிடம் திணிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com