போக்குவரத்துக் கழகங்களின் புறக்கணிப்பால் தீவாகக் காட்சியளிக்கும் செய்யாறு தொகுதி!

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் புறக்கணிப்பால் தென் மாவட்டப் பகுதிகளுக்கு சென்று வர பேருந்து வசதியில்லாமல் செய்யாறு தொகுதி, தீவாக காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது.
திருவத்திபுரம் நகராட்சி பேருந்து நிலையம்
திருவத்திபுரம் நகராட்சி பேருந்து நிலையம்


செய்யாறு: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் புறக்கணிப்பால் தென் மாவட்டப் பகுதிகளுக்கு சென்றுவர பேருந்து வசதியில்லாமல் செய்யாறு தொகுதி, தீவாக காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது.

செய்யாறு தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய் கோட்டமாகவும், அரசு அலுவலகங்களின் தலைமையிடமாகவும், திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திலும் அமைந்துள்ளது.

செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் 222 கிராமங்களில் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவத்திபுரம் நகராட்சி, செய்யாறு, வெம்பாக்கம், அனுக்காவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களும் அமைந்துள்ளன. 

செய்யாறில் அரசு அலுவலகங்களின் தலைமையிடமாகவும், அரசு கலைக் கல்லூரி, தனியார் கலைக் கல்லூரி, மூன்று பொறியியல் கல்லூரிகள், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகள்,  பத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள்  பத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் என பல  கல்வி  நிலையங்கள் அமைந்துள்ளன. 

தென்கிழக்கு ஆசியாவிலேயே இரண்டாவதாகத் திகழும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை,  சுமார்  40 ஆயிரத்திற்கும் மேல் பணிபுரியும் சிப்காட் பகுதியில் லோட்டஸ் புட்வேர் கம்பெனி உள்பட பல பெரிய கம்பெனிகள் அமைந்துள்ளன. சிப்காட் பகுதி பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் வகையில் பல  பெரிய கம்பெனிகள் அமையப் பெற்ற பகுதி. 

வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, திண்டிவனம் வழியாகவும், அதேபோல வேலூரில் இருந்து ஆரணி, சேத்பட் வழியாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி,  திண்டிவனம் வழியாக விழுப்புரம்,  திருச்சி, மதுரை மற்றும் பாண்டி, கடலூர், சிதம்பரம் போன்ற பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.                      

செய்யாறு பேருந்து பணிமனை திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போக்குவரத்து வசதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதால் மாவட்டமும் மற்றும் செய்யாறு போன்ற தொகுதிகளில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளாக திருவண்ணாமலையில் போக்குவரத்து மண்டலம் தொடங்கப்பட்டதாகும். போக்குவரத்து மண்டலம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிய நிலையில் செய்யாறு தொகுதியில் பொதுமக்களுக்குத்தேவையான அளவில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக செய்யாறு தொகுதி வழியாக தொலை தூரம் செல்லும் (SETC)  பேருந்து வசதி ஒன்று கூட ஏற்பபடுத்தவில்லை.

நின்று விட்ட அரசுப் பேருந்துகள்

செய்யாறு தொகுதி வழியாக சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி-திருப்பதி, சேலம்-சென்னை, காஞ்சிபுரம்-திருச்சி, திருத்தணி-நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு தொலைதூர (SETC) பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது இந்த தொலைதூரப் பேருந்துகள்  செய்யாறு வழியாக இயக்கப்படாமல் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல சேலம் - சென்னை, காஞ்சிபுரம் - திருச்சி  ஆகிய பேருந்துகள் எந்த ஊர் வழியாகச் செல்கின்றன என்றும்  தெரியவில்லை.

அதேபோல் செய்யாறு பணிமனையில் இருந்தும், செய்யாறு வழியாகவும்  தடம் எண். 305 வேலூர்  -  செய்யாறு - கும்பகோணம், தடம் எண். 205. வேலூர்  - செய்யாறு  - புதுச்சேரி, தடம் எண்.235. காஞ்சிபுரம் - செய்யாறு - திருவண்ணாமலை, தடம் எண்.186  ஆற்காடு - செய்யாறு - நாகப்பட்டினம், தடம் எண் 430. காஞ்சிபுரம் - செய்யாறு - ஒகேனக்கல், தடம் எண் 86. வேலூர் - செய்யாறு - மேல்மருவத்தூர், தடம் எண் 133. செய்யாறு - சித்தாத்தூர் - சென்னை, தடம் எண். 236. செய்யாறு - பெருங்கட்டூர் - சென்னை, தடம் எண்.180. செய்யாறு - காஞ்சிபுரம் - பிராட்வே, தடம் எண். 212T. செய்யாறு - திருத்தணி, தடம் எண். 157. செய்யாறு - மாமல்லபுரம், தடம் எண். 209  வேலூர் - செய்யாறு - புதுச்சேரி (வேலூர் பணிமனை) போன்ற வழித்தடங்கள் கடந்த காலங்களில் புதியதாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 

தொலை தூர பேருந்து வசதி இல்லாத செய்யாறு தொகுதி

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நீண்ட தூரம் செல்லும் தொலைதூர பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், செய்யாறு தொகுதியில் மட்டும் இன்று வரையிலும் தொலைதூரம் செல்லும் பேருந்து வசதி ஒன்று கூட இல்லை. 

புறக்கணிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்

செய்யாறு தொகுதிக்கு மிக அருகாமையில் காஞ்சிபுரம், 55 கி.மீ. தொலைவில் வேலூர் ஆகிய போக்குவரத்து மண்டலங்கள் அமைந்துள்ளன.

காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரி, கும்பகோணம், திருச்சி, திருத்தணி, திருப்பதி போன்ற தொலைதூரப் பேருந்துகளும், வேலூர் மண்டலத்தில் இருந்து பாண்டி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கும்பகோணம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு வந்தவாசி மற்றும் சேத்பட் வழியாக இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து பாண்டி, கும்பகோணம், திருச்சி, திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகளில் காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் ஒன்றிரண்டு பேருந்துகள்கூட செய்யாறு வழியாக இயக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல வேலூர் மண்டலத்தில் இருந்து ஆரணி வந்தவாசி வழியாக பாண்டி கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் செய்யாறு வழியாக செல்வதில்லை. 

அதேபோல திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை - சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளும்  ஆரணி, செய்யாறு மற்றும் சேத்பட் ,செய்யாறு வழியாக இயக்காமல் செய்யாறு தொகுதியை புறக்கணித்துவிட்டு மாறாக அவலூர்ப்பேட்டை, சேத்பட், வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலை மண்டலப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது வருந்ததக்கதாகும்.

திருவண்ணாமலைக்கு பேருந்து வசதி

திருவண்ணாமலை மாவட்டம் தொடங்கப்பட்டு சுமார் 32 வருடங்களுக்கு மேலாகியும் செய்யாறு தொகுதியைச் சேர்ந்த வெம்பாக்கம் மற்றும் பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து மாவட்டத் தலைநகர் திருவண்ணாமலை சென்றுவர காஞ்சிபுரம், வெம்பாக்கம், அசனமாப்பேட்டை, செய்யாறு வழியாகவும், பிரம்மதேசம், தென்னம்பட்டு, செய்யாறு வழியாகவும் திருவண்ணாமலைக்கு  பேருந்து இயக்கிட வேண்டும் என்று வெம்பாக்கம் ஓன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் நகல்களை போக்குவரத்து அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும்  போக்குவரத்து அதிகாரிகளுக்கு பல முறை அனுப்பியும் இதுநாள் வரையில் பேருந்து வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வளவு வாய்ப்புகள் பெற்று செய்யாறு தொகுதி போக்குவரத்து வசதியில் மட்டும்  இக்காலத்திலும் இன்னமும் மிகவும் பின்தங்கியே உள்ளது. செய்யாறில் இருந்தோ அல்லது செய்யாறு வழியாகவே (SETC) தொலைதூர பேருந்து வசதி ஒன்றுகூட இல்லாததைக் குறித்தும், தொலைதூர பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரியும், அனைத்து வியாபாரிகள் சங்கம், பொது மக்கள் மற்றும் சேவை அமைப்பினர்  தொலைதூர பேருந்து வசதிக்காக பல வருடங்களாக பேராடி வருவது குறித்தும், செய்யாறு தொகுதி எம்எல்ஏக்களிடம்  தொடர்ந்து கோரிக்கையாக முன்வைத்து வலியுறுத்தி வருகின்றனர்.  

செய்யாறு தொகுதி மக்களின் நன்மை கருதியும், செய்யாறு வழியாக வேறு போக்குவரத்துக் கழக பேருந்துகள் செல்லாத நிலையில் கருத்தில் கொண்டு, செய்யாறு   பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்துடன் செய்யாறு வழியாக நீண்ட தூரம் செல்லும்  (SETC) பேருந்துகளை இயக்கிட வேண்டும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com