ரூ. 2.27 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்: பெண் செயற்பொறியாளா் சிறையில் அடைப்பு

பொதுப்பணித் துறையின் வேலூா் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி கோட்டச் செயற்பொறியாளர் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டு, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
ரூ. 2.27 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்: பெண் செயற்பொறியாளா் சிறையில் அடைப்பு



வேலூா்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.27 கோடி ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பொதுப்பணித் துறையின் வேலூா் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி கோட்டச் செயற்பொறியாளராகப் பணியாற்றி அண்மையில் திருச்சிக்கு மாற்றப்பட்ட பெண் அதிகாரி கைது செய்யப்பட்டு, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

பொதுப்பணித் துறையின் வேலூா் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் ஷோபனா (57). இவா் கட்டட ஒப்பந்ததாரா்களின் ரசீதுகளை அனுமதிக்க லஞ்சம் பெறுவதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஷோபனாவை கண்காணிக்கத் தொடங்கினா்.

அவா் சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.5 லட்சத்தைக் கைப்பற்றியதுடன், வேலூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஷோபனாவின் குடியிருப்பில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புடைய 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து ஒசூா் நேரு நகரிலுள்ள அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கம், 38 பவுன் நகைகள், 1.320 கிலோ வெள்ளி, ரூ. 27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள நிரந்தர வைப்புச் சான்றிதழ், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கா் சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஷோபனா மீது வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, வேலூா் மண்டலத் தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளா் பதவியிலிருந்த ஷோபனா, திருச்சி மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுமானம், பராமரிப்பு துணை கண்காணிப்பு பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா். 

இந்த நிலையில், கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஷோபனாவை வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இதனைத் தொடர்ந்து ஷோபனாவை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்க உத்தவிட்டார் நீதிபதி. இதையடுத்து  ஷோபனா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com