
நடிகர் சந்தானத்தின் புகைப்படத்துடன் வெளியான விழிப்புணர்வு செய்தி
சமூக வலைதளங்களில் நாள்தோறும் விதவிதமான மோசடிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிய மோசடி ஒன்று நடந்து வருவதாக, நடிகர் சந்தானம் பெண் வேடத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து விருதுநகர் மாவட்ட காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விழிப்புணர்வு தகவலில், சமூக வலைதளங்களில் விடியோ அழைப்புகள் மூலம் சில ஆண்களே பெண்கள் போல ஆபாசமாக பேசி உங்களையும் பேச வைத்து அதை பதிவு செய்து அதன்மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செயல்படுகிறது. இது போல முகம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புக்களை ஏற்காதீர்கள், விழிப்புடன் இருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மோசடிகள் குறித்தும் காவல்துறையினர் நாள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.