
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 125 பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் குமார் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரியை குறைத்து கட்டுமானப் பொருள்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல கட்டுமான தொழில், கட்டுமான தொழிலாளர் சட்டம், நல வாரியங்களை சீரழிக்கக் கூடாது. பணப்பலன்களை தொழிலாளர் பங்களிப்புடன் இணைக்கக் கூடாது. கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த மறியலில் சிஐடியு மாநில துணை தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜன், கணேஷ் உள்ளிட்ட 175 பேரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.