Enable Javscript for better performance
இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது: வைகோ- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது: வைகோ

    By DIN  |   Published On : 03rd December 2021 09:02 PM  |   Last Updated : 03rd December 2021 09:02 PM  |  அ+அ அ-  |  

    இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலரும், எம்பியுமான வைகோ தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தின்போது உரையாற்றிய அவர், இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு வழங்கினார்.

    அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம்’ எனக் கூறி உள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.

    இது ஒரு அடக்குமுறை ஆகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகின்றது.

    மேலும், மத்திய அரசு அறிவிக்கின்ற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங்களுக்காக, மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டி வந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

    அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கின்றது.

    இதையும் படிக்க- பிரிட்டனிலிருந்து சென்னை வந்த சிறுமிக்கு கரோனா

    எனவே, அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், மத்திய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

    1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மறைந்த அண்ணா இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார்.

    அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது.

    இவ்வாறு வைகோ பேசினார்.

    அவரது பேச்சுக்கு இடையூறுகள் எழுந்தன. ஆனால், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தென் மாநிலங்களைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் வைகோவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


    TAGS
    Vaiko

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp