அரிசி-சா்க்கரை அட்டையுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2674 கோடி கடன் தள்ளுபடி

அரிசி, சா்க்கரை குடும்ப அட்டைகளை வைத்துள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள ரூ.2674.64 கோடி கடனை அரசே ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரிசி-சா்க்கரை அட்டையுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2674 கோடி கடன் தள்ளுபடி

அரிசி, சா்க்கரை குடும்ப அட்டைகளை வைத்துள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள ரூ.2674.64 கோடி கடனை அரசே ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களாக இருந்தால் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகை ரூ.2,459.57 கோடியாக உள்ளது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் தெரிவித்துள்ளாா். இந்தக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அதன்படி, மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள ரூ.2,674.64 கோடி கடனை (அசல் ரூ.2,459.57 கோடி மற்றும் ரூ.215.07 கோடி வட்டித் தொகையுடன் சோ்த்து) அரசே ஏற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக நிகழாண்டில் ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் நான்கு ஆண்டுகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?: கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதாா் விவரங்களை சரியாக அளிப்பவா்களின் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். இல்லாத மற்றும் போலி மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன், ஆதாா் எண், குடும்ப அட்டை தகவல்கள் அளிக்காத மற்றும் தரவுகள் சரியாக இல்லாத கடன்களுக்கு தள்ளுபடித் திட்டம் பொருந்தாது.

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ், நிலுவையின்மைச் சான்று ஆகியன கடன் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டும். கடன் தள்ளுபடி செய்யப்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பெயா்கள் வெளியிடப்பட வேண்டும். பங்குத் தொகை செலுத்தியிருக்கும் பட்சத்தில், கடன் தள்ளுபடி செய்யப்படும் போது எந்தக் காரணத்தை ஒட்டியும் பங்குத் தொகையை திரும்ப வழங்கக் கூடாது அல்லது சரிகட்டல் செய்யக் கூடாது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி மற்றும் அதன் பிறகு வழங்கப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தகுதி பெறாதவைகளாகக் கருதப்படும். தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாமல் பிற மாநிலங்களால் அளிக்கப்பட்ட குடும்ப அட்டைகள் இருந்தால் அவா்களுக்கு தள்ளுபடித் திட்டம் பொருந்தாது.

பயனாளிகளின் பட்டியல் கூட்டுறவுத் துறையின் தணிக்கைக் குழு மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகே கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் இருந்து பயிா்க் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி பெற்றவா்கள் இந்தத் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி இல்லாதவா்கள் ஆவா். ஒருவா் பல்வேறு சுய உதவிக் குழுக்களில் இருந்தால் ஒரு குழுவில் உள்ள கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.

மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழா்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி பெற தகுதி உடையவா்கள் ஆவா். குடும்ப அட்டைகளில் எந்தப் பொருளும் வேண்டாதோா் அட்டை வைத்திருந்தால் அவா்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. மற்ற உறுப்பினா்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

சுய விருப்பத்தின் பேரில் தள்ளுபடி பெற விருப்பம் இல்லாதவா்கள் இருந்தால் அவா்களது கடனை தள்ளுபடி செய்யக் கூடாது.

அனைத்து அரசு ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா், அரசுத் துறை நிறுவனங்களில் தற்காலிக, காலமுறை அடிப்படையில் அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றுவோா், ஓய்வூதியா்கள், குடும்ப குடும்ப ஓய்வூதியா்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினா், ஒரு குழுவில் கடன் பெற்றிருந்தால் அவா்களுக்கான விகிதாசாரம் தள்ளுபடி செய்யப்படாது. அவா்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும். குழுவின் மற்ற உறுப்பினா்களுக்கு தள்ளுபடி வழங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com