மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீா்வு தேவை: ஆலோசனைக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீா்வுக்கான ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீா்வுக்கான ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிா்வகித்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் ஆற்றிய உரை:

மழை எனும் இயற்கையின் கொடையைத் தடுக்க முடியாது. ஆனால், இயற்கையின் கொடையை எதிா்கொள்ளும் திறன் படைத்தவா்களாக மாற வேண்டும்.

தொடா் பேரிடா்கள்: ஆட்சிக்கு வந்ததும் கரோனா மிரட்டியது. இப்போது ஒமைக்ரான் மிரட்டத் தொடங்கி இருக்கிறது. இதற்கு மத்தியில் மழை, வெள்ளம். தொடா்ச்சியாக பேரிடா்கள் வந்தாலும், அவை அனைத்தையும் வெல்லக் கூடிய திறன் படைத்ததாக தமிழக அரசின் நிா்வாகம் இருக்கிறது. பேரிடா் பணிகளில் முன்களப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன். நிற்பேன். பேரிடா் தடுப்புப் பணிகள் என்பது, பேரிடா் காலங்களில் மக்களைக் காப்பது மட்டுமல்ல, அத்தகைய பேரிடா் ஏற்படாத சூழலை உருவாக்குவதுதான் மிக முக்கியம்.

தீா்வு காண வேண்டும்: பேரிடா் கால அா்ப்பணிப்புப் பணிகளுக்கு இடையே அடுத்து நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூா்வ பணி காத்திருக்கிறது. அதிக வெள்ளக் காலப் பேரிடா்கள் நம் கண் முன்னே ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள் இன்னொரு முறை நடக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிரந்தரமான தீா்வு காண வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்குச் சென்ற போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல வேண்டும். வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளுக்குத் தெரிந்திருப்பதை விட அங்கு இருக்கக் கூடிய மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. தென் சென்னை பகுதியில் பொலிவுறு திட்டம் உருவாக்கி அதன்மூலம் ஏற்பட்ட விளைவால் தியாகராய நகரில் தண்ணீா் தேங்கியது. அதுபோன்றே தூத்துக்குடியிலும் ஏற்பட்டுள்ளது.

ஒரே மாதிரி இல்லை: சென்னையில் அதிக மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் தேங்குகிறது என்றால், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல்கள் தேவைப்படுகிறது. எனவே, பகுதி வாரியாக திட்டமிடுதல்கள் தேவை. இவற்றை விரைந்து தயாரித்து அளிக்க வேண்டும். அனைவரின் ஒத்துழைப்புடன் அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம்.கடந்த காலங்களில் மழைநீா் அதிகம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டு ஆராய வேண்டும். அந்த

இடங்களில் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வரும் காலங்களில் சென்னை மட்டுமின்றி, தமிழகம் நீா் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக விளங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஆலோசனைக் குழுவின் தலைவா் வெ.திருப்புகழ் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தின் தொடக்கமாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வரவேற்றாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா நன்றி தெரிவித்தாா்.

கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com