
தமிழக அரசு
ராஜாஜியின் 143-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு நாளை மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மூதறிஞர் ராஜாஜியின் 143-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வளாகம்- காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு நாளை (10-12- 2021) காலை 10 மணி அளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.
முதிர்ந்த அரசியல் ஞானமும், ஆழ்ந்த அனுபவம் கொண்டிருந்த ராஜாஜியின் நேர்மையும் எளிமையும் இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. நாட்டின் மிக
உயரிய பதவிகளை வகித்த போதிலும், மிகவும் எளிமையாக சொற்ப வாடகையில் வீட்டிலேயே வாழ்நாளின் இறுதிவரையில் வசித்து வந்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்று மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது, தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தையும் முறையாக அரசிடம் ஒப்படைத்துவிட்டு தனது கைத்தடியுடன் வெளியேறினார்.
இதையும் படிக்க- விவசாயிகளுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம்: ஹர்சிம்ரத் கெளர் பாதல்
விடுதலைப் போராட்டத்தில், அரசு நிர்வாகத்தில் தனது அளப்பரிய பணிகளை ஆற்றிய போதிலும், இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமும், அதன் தொடர்ச்சியாக அரிய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். குறிப்பாக, மிகப்பெரிய காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார். அவர் எழுதிய பல நூல்களில் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ ’வியாசர் விருது’ ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதன் பொருட்டு 1858ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்று, தலைசிறந்த நிர்வாகியாக விளங்கியமைக்கு 1959 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
அன்னாரின் அருமை பெருமைகளை அடுத்து வருகின்ற தலைமுறையினரும் அறிந்து பயன்படுகின்ற வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த எளிமையான வீடு முத்தமிழறிஞர் கருணாநிதியால் அரசின் சார்பில் நினைவிடமாக ஆக்கப்பட்டது. மேலும், அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும், தன் வாழ்நாள் முழுதும் நூல்களை விரும்பிப் படிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் நினைவாக ஒரு நூலகமும் கட்டப்பட்டு கருணாநிதியால் கடந்த 05.05.1975 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டம் தொடங்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நாட்டின் மிகப்பெரிய ஆளுமைமிக்க உயரிய பதவிகளை அலங்கரித்து பின்னாளில் திராவிட கட்சிகள் மூலமாகத்தான் தமிழ்நாடு விடிவு பெறும் என்பதை பெரிதும் உணர்ந்து அதற்கு அடித்தளமிட்டார். பெரியார், ராஜாஜியை அரசியல் ரீதியாக எதிர்த்து வந்தாலும், அவரிடத்தில் கொண்டிருந்த நட்பு ஆழமானது ஆத்மார்த்தமானதும்கூட. ராஜாஜி நல்லடக்கம் செய்யும்பொழுது உடல் இயலாத நிலையிலும் பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுததே நட்பிலக்கணத்திற்கு நற்சாட்சியாகும்.
அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ராஜாஜியின் பிறந்த நாள் 10.12.2021 அன்று சென்னையிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவரின் நினைவு இல்லத்திலும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.