வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்: சீமான்

வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்: சீமான்

வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில் 90 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2018, 2019, 2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இணையவழி மறுதேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பெரும்பாலான மாணவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கொடுங்கோன்மையானது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுத்தாள்களைத் திருத்தாமலே மீண்டும் மாணவர்கள் தோல்வி என அறிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எவ்வித முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாமல் இணைய வழியில் பாடங்களை நடத்திவிட்டு, தேர்வுகளை நடத்துவதற்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவற்றில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலே கடும் தண்டனைக்கு உள்ளாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மேலும் பல்கலைக்கழகத்தால் இணையவழி தேர்வுக்காக உருவாக்கப்பட்ட தேர்வுச்செயலியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்வுகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாணவர்களைப் பலிகடாவாக்குவதும் பல்கலைக்கழகத்தின் அலட்சியப்போக்கையே வெளிக்காட்டுகிறது.

உண்மையிலேயே தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்கலைக்கழகம் கருதினால் நடைபெற்ற தேர்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தியிருக்கலாம். அதைவிடுத்துத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுதேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com