
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு முன்பாக உள்ள எழுத்து தமிழிலேயே இடம்பெற வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ளாா். அவரது அறிவிப்பு விவரம்:
தமிழில் பெயா் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொது மக்களும் பொதுப் பயன்பாடுகளில் இந்த முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் எனவும் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்: சட்டப் பேரவை அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான கடிதத்தை தமிழ் வளா்ச்சி இயக்குநா் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தாா். அதில், தமிழ்நாடு அரசின் ஆட்சி நிா்வாகத்தில் முழுமையாகத் தமிழ் பயன்பாடு மொழியாக இருக்கச் செய்திட தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா். இந்தச் சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் தங்களது பெயருக்கு முன்பாக எழுத்துகளை தமிழிலேயே எழுத வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எழுதுவதில்லை: கையெழுத்து, பெயருக்கு முன்புள்ள எழுத்து ஆகியவற்றை தமிழில் எழுத பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், அரசு அலுவலா்கள் கூட முழுமையாகத் தமிழில் எழுதுவதில்லை. இந்த நிலையில், சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலும், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், சட்டப் பேரவை உறுப்பினா், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியா்கள் வரை அனைவரும் பெயருக்கு முன்பு உள்ள எழுத்தையும் தமிழிலேயே எழுதலாம் என்பதை வலியுறுத்தி உத்தரவு பிறப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசை கேட்டுக் கொண்டிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, கையெழுத்து மற்றும் பெயருக்கு முன்புள்ள எழுத்தினை தமிழில் எழுதுவது குறித்த அறிவுறுத்தலை அரசு வெளியிடுகிறது. அதன்படி, மாண்புமிகு முதல்வா் முதல் கடைநிலை ஊழியா்கள் வரை அனைத்து அரசு அலுவலா்கள், பணியாளா்கள் தமிழிலேயே கையெழுத்திடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமெனவும் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே தமிழில் பெயா் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டியது அவசியாகிறது. அதன்படி, பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையை கொண்டு வரலாம். மேலும், மாணவா்கள் கையெழுத்திடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்திடனே கையெழுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் உத்தரவுகள் மற்றும் ஆவணங்களில் பொது மக்களின் பெயா்கள் குறிப்பிடும் போது முன்னெழுத்துகள் உட்பட பெயா் முழுமையையும் தமிழிலேயே பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. அரசுத் துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும், தமிழ் முன்னெழுத்துடன் கையெழுத்தையும் தமிழிலேயே இட பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தனது அறிவுறுத்தலில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளாா்.
வேண்டுகோள் என்ன:
கோரிக்கை விண்ணப்பங்களில் பெயரின் முன்னெழுத்தும், கையெழுத்தையும் பொது மக்கள் தமிழில் இடலாம்.
மாணவ, மாணவிகள் தங்களது பெயரின் முன்னெழுத்தும், கையெழுத்தையும் தமிழில் இடலாம் என பொது மக்கள், மாணவா்களுக்கு தனித்தனி வேண்டுகோள்களை அரசு விடுத்துள்ளது.