
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் ஏற்கெனவே சில வழக்குகளில் உத்தரவிடப்பட்டது. அதன்படி, 225 எண்ணிக்கை வரையில் சமூக பாதுகாப்பு இயக்குநரிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றில் 103 எண்ணிக்கைகளுக்கு 1.99 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு தொடா்பாக 122 கோரிக்கைகள் நிலுவையில் வைக்கப்பட்டு நிதித் தேவைக்காக அரசிடம் கோரப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் தெரிவித்திருந்தாா். இதனிடையே, சென்னை உயா் நீதிமன்றத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், காவல் துறை வசமுள்ள அனைத்து கோரிக்கைகளையும் சமூக பாதுகாப்புத் துறைக்கு அனுப்பிட உத்தரவிடப்பட்டது. அதன்படி, காவல் துறை தலைவா் அலுவலகத்தில் இருந்து சுமாா் 1,200 கோரிக்கைகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்துடன் இழப்பீட்டு தொகை கேட்டு சமூக பாதுகாப்புத் துறை இயக்குநரகத்துக்கு வரும் கோரிக்கைகள் தினமும் அதிகரித்து வருவதாக சமூக பாதுகாப்பு இயக்குநா் தெரிவித்துள்ளாா். அவரது கோரிக்கையைப் பரிசீலித்து தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதிக்கு கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தனது உத்தரவில் ஷம்பு கல்லோலிகா் தெரிவித்துள்ளாா்.