Enable Javscript for better performance
கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.08 கோடி நகைக்கடன் முறைகேடு: இருவர் இடைநீக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.08 கோடி நகைக்கடன் முறைகேடு: இருவர் இடைநீக்கம்

    By DIN  |   Published On : 11th December 2021 03:12 PM  |   Last Updated : 11th December 2021 03:12 PM  |  அ+அ அ-  |  

    Keeranur Co-operative Bank Rs. 1.08 crore jewelery loan scam: Two suspended

    கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.08 கோடி நகைக்கடன் முறைகேடு: இருவர் இடைநீக்கம்

     

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ரூ. 1.08 கோடி மதிப்பில் நகைக்கடன் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிச் செயலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

    இவர்கள் இருவருடன் நகை மதிப்பீட்டாளர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்திட மாநிலக் கூட்டுறவுப் பதிவாளர் அண்மையில் உத்தரவிட்டார். இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலுள்ள கீரனூர் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலும் கடந்த டிச. 7ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

    இங்கு நகைக்கடனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள கணக்குப்படி, ரூ. 3.63 கோடி மதிப்பிலான 934 பொட்டலங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் 823 பொட்டலங்கள் மட்டுமே வங்கியிலுள்ள நகைப்பெட்டகத்தில் இருந்தன.

    102 பொட்டலங்கள் நகைப்பெட்டகத்தின் இருப்பில் இல்லை. இவற்றின் கடன் மதிப்பு ரூ. 1,08,17,500 ஆகும்.

    இதுகுறித்த தகவல், புதுக்கோட்டை மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளர் எம். உமாமகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோதனை நடத்தியவர்களின் ஆய்வறிக்கையைப் பெற்றுக் கொண்ட இணைப் பதிவாளர், உடனடியாக நகைப்பெட்டகத்தின் சாவியை, தலைமை அலுவலகப் பொறுப்பில் பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து இந்த நகைக்கடன்கள் யார் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து கடந்த 3 நாட்களாக, வங்கிச் செயலர் பி. நீலகண்டன், மேற்பார்வையாளர் என். சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் என். கனகவேலு ஆகியோரிடம் ரகசிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வங்கிக்குச் சேர வேண்டிய மொத்த தொகையும் 3 நாட்களில் திரும்பப் பெறப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில், துறைரீதியான நடவடிக்கையாக வங்கிச் செயலர் பி. நீலகண்டன், மேற்பார்வையாளர் என். சக்திவேல் ஆகியோர் சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் என். கனகவேலு வங்கிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    மேலும் இவர்கள் மூன்று பேர் மீதும் காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp