
எடப்பாடியை அடுத்த மேட்டுத்தெரு பகுதியில் பொங்கல் பானைகள் செய்யும் பணி துரிதமாக நடைபெறும் காட்சி..
எடப்பாடி: சேலம் மாவட்டப் பகுதிகளில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், மண்பாண்ட உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கல் பானை செய்யும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பொழிந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைப் பொழிவு இன்றி மிதமான தட்ப வெப்பம் நிலவி வருகிறது.
இச்சூழல் மண்பாண்ட உற்பத்திக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், வர இருக்கும் தைப்பொங்கல் திருநாள் பயன்பாட்டிற்காக, பொங்கல் பானை தயாரிப்பில் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
எடப்பாடியை அடுத்த மேல் சித்தூர், மேட்டுத் தெரு, குலாலர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பொங்கல் பானை உற்பத்தி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இப்பகுதி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூறுகையில், அண்மையில் பெய்த கனமழையால் அருகில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாலும் பானை உற்பத்திக்குத் தேவையான வண்டல் மண் மற்றும் களிமண் போதிய அளவு கிடைக்கப் பெறாத நிலையில் நீண்ட தொலைவு வாகனங்களில் பயணம் செய்து மண்பானை உற்பத்திக்கான மூலப் பொருள்களை கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்டங்கள், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் நிலையில் எரிபொருள்களின் விலை உயர்வால் போக்குவரத்து செலவு கூடுதலாக ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் பொங்கல் திருவிழாவின்போது பயன்பாட்டிற்கு வரும் மண்பாண்டங்களின் விலை சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இன்னும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில் இப்பகுதியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி கடந்த ஆண்டைவிட சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இப்பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறினர்.
பல்வேறு அளவுகளிலான பொங்கல் பானைகள், அகல் விளக்குகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்திடும் பணியில் இப்பகுதித் தொழிலாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்