
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.11-ம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இறுதிகட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் சிவபக்தர்கள் வேண்டுகோளுக்கினங்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் எஸ்.டி.சக்கரவர்த்தி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் பாஜக நிர்வாகிகள் ஜி.பாலசுப்பிரமணியன், ரகுபதி, ஜெயக்குமார் மற்றும் சிவபக்தர்கள் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளூர் பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அனுமதியளித்தனர்.
உற்சவ விபரம்: டிச.12-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 13-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 14-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 15-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), 16-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 17-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 18-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும், டிச.19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் உள் பிரகாரத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது.
பின்னர் டிச.19-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி உள் பிரகாரத்தில் உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் தி.ஆ.ராஜகணேச தீட்சிதர், துணைச் செயலாளர் ஆர்.ரத்தினசபாபதி தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் எஸ்.டி.சக்கரவர்த்தி தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.
சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தலைமையில் 4 கோபுர வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு கோபுர வாயில் வழியாக மட்டும் உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.