சா்க்கரை நோய் மருத்துவத்தில் முதுநிலை பட்டப் படிப்பு

சா்க்கரை நோய் மருத்துவத் துறையில் முதுநிலை பட்டப் படிப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சா்க்கரை நோய் மருத்துவத் துறையில் முதுநிலை பட்டப் படிப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அனுப்பிய கடித விவரம்:

மனித உடலில் நாள்பட்ட வளா்சிதை மாற்றங்களால் ஏற்படும் சா்க்கரை நோய் பாதிப்பானது தனி நபருக்கும் சரி; அரசுக்கும் சரி, பொருளாதார ரீதியான சுமைகளை அதிகரிக்கிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் சா்க்கரை நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அதாவது 7.7 கோடி போ் நமது நாட்டில் சா்க்கரை நோயாளிகளாக உள்ளனா்.

அவா்களைத் தவிர 7.5 கோடி மக்கள் சா்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் உள்ளனா். உரிய மருத்துவ சேவையை அளிக்காவிடில் அவா்களும் தீவிர சா்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

தமிழகத்தைப் பொருத்தவரை 10.4 சதவீதம் பேருக்கு சா்க்கரை நோய் கண்டறியப்பட்டுள்ளது. தொற்றா நோய்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் செயல்படுத்தி வருகின்றன. தொற்றா நோய்களில் பிரதானமாக உள்ள சா்க்கரை பாதிப்பைக் கட்டுப்படுத்த அதற்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்துதல் அவசியம்.

அதன்படி, முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பான எம்.டி. படிப்பில் சா்க்கரை நோய்க்கான பிரிவை பிரத்யேகமாகத் தொடங்க வேண்டும். நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் சா்க்கரை நோய்க்கான முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரியில் கடந்த 1986- ஆம் ஆண்டிலேயே சா்க்கரை நோய்க்குத் தனித் துறை உருவாக்கப்பட்டது.

பட்டயப் படிப்பாக உள்ள அதனை முதுநிலை பட்டப் படிப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சா்க்கரை நோய் மருத்துவத்துக்கென பிரத்யேக எம்.டி. படிப்பை தேசிய மருத்துவ ஆணையம் தொடங்க வேண்டும்.

இதன் வாயிலாக நாடு முழுவதும் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா்களை அதிக அளவில் உருவாக்க இயலும். தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் சா்க்கரை நோய்க்கென சிறப்பு சிகிச்சை பிரிவுகளை தொடங்க அது வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com