தமிழகத்தின் தியாக தீபங்கள் - 121: வை.மு. கோதைநாயகி

சென்னை திருவல்லிக்கேணியில் 1-12-1901-இல் பிறந்தவர் வை. மு. கோதைநாயகி.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 121: வை.மு. கோதைநாயகி

சென்னை திருவல்லிக்கேணியில் 1-12-1901-இல் பிறந்தவர் வை.மு. கோதைநாயகி.

அவர் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. 10 வயதுக்கும் மேல்தான் அவரின் சிறிய தகப்பனாரிடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் புத்தக வாசிப்பில் மூழ்கினார். அவருக்கு சுயஞானம் அதிகம். எதையும் எளிதாக விளங்கிக் கொள்ளும் ஆற்றலும், உள்வாங்கிக் கொண்டதை தத்ரூபமாக வெளிப்படுத்தும் திறனும் இயல்பாக அமையப் பெற்றிருந்தார். கணவர் பார்த்தசாரதி, அவரின் முன்னேற்றத்திற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டார்.

1925-இல் காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்தார். அதற்குப் பிறகு கதராடை உடுத்தத் தொடங்கினார். தங்க ஆபரணங்களை முற்றாகத் தவிர்த்தார்.

அம்புஜத்தம்மாள் தொடங்கிய "சுதேசி லீக்' சங்கத்தில் உறுப்பினரானார். இவர்கள் இன்னும் சிலரை இணைத்துக் கொண்டு ஊர்ஊராகச் சென்று கதர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிராமங்களுக்குச் சென்று விடுதலை உணர்வு மக்கள் மனதில் வேரூன்றும் விதத்தில் ஏராளமான கூட்டங்களில் உரையாற்றினர்.

"சுதேசி லீக்' சார்பாக அடிக்கடி நடத்தப்படும் ஊர்வலங்களில் பங்கேற்று பாரதியார் பாடல்களையும் தாம் எழுதிய தேசபக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

1931-இல் திருவல்லிக்கேணியிலுள்ள கள்ளுக்கடை முன்பு மறியல் செய்துள்ளார்.1932 பிப்ரவரி 27-இல் சைனா பஜாரில் வை.மு.கோதைநாயகி உள்பட சிலர் தடையை மீறி கையில் தேசியக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்றனர். கைது செய்யப்பட்டனர். அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். மொழிபெயர்க்கும் தோழிகளின் உதவியுடன் காந்தியடிகளிடம் உரையாடியுள்ளார். மாநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு விடுதலை இயக்கங்களில் முன்னிலும் தீவிரமாக ஈடுபட்டார். தொடர்ந்து காங்கிரஸ் மேடைகளில் பேசினார். 1937 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருமாத காலம் திருநெல்வேலி மாவட்டம் முழுக்க காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

115 நாவல்களைப் படைத்தார். 1932-இல் சிறையிலிருந்தபோது "உத்தம சீலன்' நாவலை எழுதினார். கைதிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் "சோதனையின் கொடுமை' என்ற நாவலையும் சிறையில் எழுதினார். 1934-இல் சுதந்திரப் போராட்டத்தைக் கருவாக்கி "தியாக கொடி' நாவலை எழுதினார். அரசியல் விடுதலையோடு பெண் விடுதலை, பெண் கல்வி, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு, வரதட்சிணை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற பல சமூக விடுதலைக்கான கருத்துகளுக்குத் தனது படைப்புகளில் அழுத்தம் கொடுத்தார்.

"ஜெகன் மோகினி' இதழின் ஆசிரியராக 1925-இல் இதழியல் துறையில் நுழைந்த வை.மு.கோதைநாயகி, தொடர்ந்து 35 ஆண்டுகள் அத்துறையில் தடம் பதித்துள்ளார்.

தன்னம்பிக்கையையும் தேசபக்தியையும் ஆயுதங்களாக்கி படைப்புகள் மூலமும் பங்களிப்பின் மூலமும் சுதந்திரக் கனலை மூட்டிய வை.மு.கோதைநாயகி 1960 பிப்ரவரி 20-ஆம் தேதி தனது 59-ஆவது வயதில் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com