
புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள்
புதுச்சேரி: நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது என்பதை வலியுறுத்தி, புதுச்சேரியில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
வங்கிகளை பாதிக்கும் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி, வியாழக்கிழமை தொடங்கி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்திலும், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி யூகோ முதன்மை வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை காலை திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுச்சேரியில் மட்டும் 1200 ஊழியர்கள் வரை பங்கேற்று உள்ளதால், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமையும் வங்கி பரிவர்த்தனை பணிகள் எதுவும் நடைபெறாது என்றும், இதனால் ரூ.500 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கும் என்றும் வங்கி ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.