
மாணவர் மணிகண்டன் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் அவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், தற்போது நஞ்சுண்டு உயிரிழந்தார் எனக்காவல்துறை அறிவித்திருப்பது பல்வேறு ஐயங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது.முதலில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகவும், பின்னர், தொண்டையில் உணவு சிக்கி இறந்ததாகவும் காவல்துறையினர் கூறிவந்த நிலையில், தற்போது நஞ்சுண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.
இதையும் படிக்க- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கரோனா
தற்கொலை செய்துகொண்டார் என்பது உண்மையென்றால், அதனைக்கூற இவ்வளவு நாட்கள் எதற்கு? அப்போதே இதனைக் கூறியிருக்கலாமே! அதனைச் செய்யாதது ஏன்? எதற்கு இவ்வளவு நீண்டகால அளவு? கதைபுனைந்து கட்டமைக்கவா? இதுவெல்லாம்தான் பெரும் ஐயத்திற்கு வலுசேர்க்கிறது. எனவே, மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், மாணவர் மணிகண்டன் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.