
செய்யாறு மோட்டார் வாகன அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தார் ஸ்டாலின்
செய்யாறு மோட்டார் வாகன அலுவலகத்திற்கு ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்துத்) துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிக்க.. ஒமைக்ரானிலிருந்து மீண்டவர் சொல்வதைக் கேளுங்கள்..
போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகன தணிக்கை போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளை பெறவும் புதிய பகுதி அலுவலகங்களை தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத் தளவசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.