டீசல் லிட்டருக்கு ரூ.10ம், பெட்ரோல் ரூ.5ம் உடனடியாக குறைக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

விலைவாசி உயர்வைக் குறைக்கும் வகையில் டீசல் லிட்டருக்கு ரூ.10, பெட்ரோல் ரூ.5ம் உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி.

சேலம்: விலைவாசி உயர்வைக் குறைக்கும் வகையில் டீசல் லிட்டருக்கு ரூ.10, பெட்ரோல் ரூ.5ம் உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

திமுக அரசை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

சேலம் அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி; எள்ளளவும் அசைக்க முடியாது.

கடந்த 7 மாத கால ஆட்சியில் மக்கள் துன்பங்களை களைய வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி உள்ளோம்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி முழுமையாக செய்யவில்லை. இதனால் சேலம் நாமக்கல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுக அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தது ஒரே காரணத்தால் பழிவாங்கும் நோக்கில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக அரசு கூறி வருகிறது.

கடந்த 2006-2011 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி விவசாயிகள்  கடன் தள்ளுபடி செய்தார். அதே நடைமுறையை பின்பற்றி தான் அதிமுக அரசும் விவசாயிகள் கடன் தள்ளுபடியை அறிவித்தது.

இது என்ன தவறு உள்ளது? விவசாயிகள் பழி வாங்குவதை நிறுத்துங்கள். விவசாயிகளுக்கு துரோகம் நினைத்தால் அதன் விளைவை நீங்கள் அனுபவிக்க வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்குவோம் என்றனர். நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி திமுக. காற்றில் ஊழல் செய்த கட்சி.
மாதந்தோறும் மின் கட்டண நடைமுறை  நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தனர். ஆனால் இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை.

நான் முதல்வராக இருந்தபோது 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து முதியவர்களையும் திமுக ஏமாற்றியுள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தனர்.

இருபத்தி எட்டு ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும். திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பொய் பேசி ஆட்சிக்கு வந்துள்ளது. பொய்தான் அக்கட்சியின் மூலதனம். மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல் லிட்டருக்கு  ரூ.3 குறைத்தனர். ஏன் டீசல் விலையை குறைக்கவில்லை?. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

25 மாநில முதல்வர்கள் மக்களை நேசிக்கின்றனர். அவர்கள் படும் துன்பங்களை போக்கும் வகையில் விலையை குறைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.11.70 பைசா குறைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.16.63 பைசா குறைக்கப்பட்டு உள்ளது.

பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.13 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.8.33 பைசாவும் குறைக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.30 பைசாவாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

டீசல் விலையை குறைத்தால் தான் சரக்கு கட்டணம் குறையும் அப்போதுதான் விலைவாசி குறையும்.

தமிழகத்தில் விலைவாசியை குறைக்கும் வகையில் உடனடியாக டீசல் லிட்டருக்கு ரூ.10ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம் விலையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அம்மா உணவகங்களில் மூடி வருகின்றனர். அதே போல ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் ரூ.190 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வலிமை சிமெண்ட் என்ற பெயரில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.400 -க்கு விற்கப்படுகிறது.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிமெண்ட் விலை உயர்வு பணம் அனைத்தும் திமுக குடும்பத்துக்கு செல்கிறது.
கட்டுமானத் தொழிலில் 25 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும்.

அதேபோல நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து  இதுவரை 557 கொலைகள் நடந்துள்ளன. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலம் முதல் அதிமுக ஆட்சியின்போது காவல்துறையைக் கண்டால் ரெளடிகளுக்கு பயம் இருந்தது.

அரசுப் பேருந்துகளுக்கு பேட்டரி இல்லாமல் 2 ஆயிரம் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல போதிய உபகரணங்கள் இல்லாமலும் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசுதான் அரசு ஊழியர்களுக்கு எப்போதும் துணையாக இருந்தது.

ஏழாவது ஊதியக் குழுவில் ரூ 14 ஆயிரத்து 200 கோடி உயர்த்தி வழங்கியது.
அதைப் போல மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மாநில அரசு ரூ. 6, 400 கோடி வழங்கி உத்தரவிட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நிதியை  அதிமுக அரசு வழங்கியது.

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மாநில அரசு இதுவரை கொடுக்கவில்லை. கடந்த ஆறு மாதமாக தராமல் நிராகரித்து விட்டார்கள்.

எனவே மத்திய அரசு உயர்த்தியது போல் மாநில அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

விவசாயிகள் இரவு பகல் பாராமல் உழைத்து அறுவடை செய்த நெற்மணிகள், நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டு கொள்முதல் செய்யாமல் மழையால் நனைந்து வீணாகி விட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவியை வழங்க வேண்டும். சென்னையில் கனமழை பெய்தது. இதனால் அந்த நகரமே மழை நீரில் மிதந்தது.

முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணி ஏதும் செய்யாமல்  தண்ணீர் தேங்கி நின்று மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

அம்மா மினி கிளினிக்குகளில் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் செயல்பட்டனர்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு வெள்ளிகிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள்.

தற்போது அம்மா மினி  கிளினிக்குகளை மூட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுகவை முடக்க நினைத்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய தோல்வியை திமுக சந்திக்கும்.

திமுக அரசு வேண்டும் என்றே அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சப் போவதில்லை.
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் அதிமுக மீது வழக்குப் போடப்பட்டது.

இந்த வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.
முன்னாள் அமைச்சர்கள் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

அதிமுகவை நேரடியாக சந்திக்க திராணியற்ற திமுக அரசு, அதிகாரிகளைப் பயன்படுத்தி மிரட்டி வருகிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை. அதிமுக மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அவதூறுகளுக்கு தகுந்த பதிலடி தருவோம். பழி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டால் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

வரும் 2024 தேர்தலில் ஒரே தேர்தல், ஒரே நாடு என்று பிரதமர் கூறியுள்ளார்.
எனவே 2 ஆண்டுகள் ஆட்சி தான் உள்ளது. கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். மக்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழிவாங்கும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்; அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் முதல் கட்சியாக அதிமுக இருக்கும் எங்களை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்பி சந்திரசேகரன் எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம்-சித்ரா மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com