பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சாலை மறியல்: சென்னை பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு 

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மணிநேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11 மணிக்கு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக தொழிலாளர்கள்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11 மணிக்கு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக தொழிலாளர்கள்.

ஸ்ரீபெரும்புதூர்: மின்னனு உதிரிபாகம் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் தொழிற்சாலை தொழிலாளர்  சுமார் 1500 மேற்பட்டோர் சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மணிநேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்னனு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஸ்ரீபெரும்புதூர், வடக்குப்பட்டு, வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம், பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரி பாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விடுதியில் கடந்த புதன்கிழமை மதியம் உணவு சாப்பிட்ட சுமார் 175க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடலம்பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புந்தமல்லி அதன்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்கள்.

இந்தநிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் உடல்நிலை  குறித்து விடுதி  நிர்வாகம் மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் மற்ற தொழிலாளர்களுக்கு  தகவல்  தெரிவிக்காததால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணிக்கு வந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் சனிக்கிழமை காலை 8 மணிவரை நீடித்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தொழிலாளர்களின் போராட்டத்தால் பல மணி நேரமாக சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தியில் ஈடுபட்டும் தொழிலாளர்கள்  சாலை மறியலை கைவிட மறுத்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரத்திற்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

இந்தநிலையில், சுங்குவார்சத்திரம் பகுதியில் சக தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது  குறித்து தகவல் அறிந்த பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியிலும், வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் பகுதியிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் சிங்கபெருமாள்கோயில் ஒரகடம் சாலையிலும், வாலாஜாபாத் செங்கல்பட்டு சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com