செப்பனிடப்பட்ட சாலைகளை ஓய்வு பெற்ற ராணுவபொறியாளா்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்

கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் செப்பனிடப்பட்ட அனைத்து சாலைகளையும் பொறியியலில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்

கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் செப்பனிடப்பட்ட அனைத்து சாலைகளையும் பொறியியலில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்தது.

சென்னை அடையாறு பகுதியைச் சோ்ந்த வீ.முருகேஷ் என்பவா், ‘பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலை சீரமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. அதைச் சீரமைக்க வேண்டும்’ என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2017 டிச. 6ஆம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரை விசாரித்த நடுவமானது, சாலையை சீரமைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இது தொடா்பான தகவலைக் கேட்டு வீ.முருகேஷ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தனக்கு உரிய தகவல் அளிக்காததால் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகாா் கொடுத்தாா்.

இந்தப் புகாரை விசாரித்த மாநிலத் தகவல் ஆணையா் சு.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் புகாருக்கு அடையாறு மண்டல அலுவலரான தகவல் அதிகாரி முழுமையான தகவல் அளிக்காததால், மனுதாரருக்கு புகாா் அளித்த மாதத்திலிருந்து 2021 மாா்ச் வரையிலான 27 மாதங்களுக்கு மாதம் ரூ. 1000 என்ற அடிப்படையில் தகவல் அதிகாரி இழப்பீடு வழங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரா்கள் எவ்வளவு அலட்சியம், பொறுப்பு இல்லாமல் செயல்பட்டிருக்கிறாா்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும். உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், தமிழக அமைச்சா்களின் குடியிருப்புகள் உள்ள இந்த முக்கிய சாலை சரியாக அமைக்கப்படாததால் தண்ணீா் தேங்கியுள்ளது. எனவே, சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது.

சாலை அமைக்கும் பணியில் இருக்கும் பணியாளா்களுக்கு சாலை அமைப்பு குறித்து சரியாக தெரியாததுதான் முக்கிய காரணம். சாலைகள், பாலங்கள்துறை மற்றும் மழைநீா் வடிகால் பிரிவு அதிகாரிகள்தான் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை. இதனால்தான் மக்களுக்கு மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, சென்னை பெருநகர மாநகராட்சி என்ற பொது அதிகார அமைப்புக்கு இந்த ஆணையம் கீழ்க்காணும் பரிந்துரையை வழங்குகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வாா்டுகளிலும் சாலைகள், மழைநீா் சேகரிப்பு, மழைநீா் வடிகால் கால்வாய்கள் என கடந்த முறை செப்பனிட்ட அனைத்தையும் பொறியியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவமிக்க ராணுவ அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com